×
Saravana Stores

விமானப்படை தினத்தை முன்னிட்டு வரும் 6ம் தேதி மெரினாவில் வான்வழி சாகச நிகழ்ச்சி: 15 லட்சம் பேர் கண்டு ரசிக்க ஏற்பாடு, விமானப்படை துணை தளபதி பிரேம்குமார் தகவல்

சென்னை: இந்திய விமானப்படை தளங்கள் மற்றும் விமான நிலையங்களில் அக்டோபர் 8ம் தேதி, 92வது இந்திய விமானப் படை தினம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில், முதன்முறையாக அக்டோபர் 6ம் தேதி விமான சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. வரும் அக்டோபர் 1 மற்றும் 2ம் தேதி இதற்கான பயிற்சிகள் நடைபெற உள்ளதாகவும், அக்டோபர், 4ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் நிகழ்ச்சிக்கான முழு ஒத்திகையும் நடைபெறும் எனவும், அக்டோபர், 6ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சிகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அக்டோபர், 8ம் தேதி தாம்பரம் விமானப்படை பயிற்சி மையத்தில் விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானப்படை வான்வழி நிகழ்ச்சியில் இந்திய விமான படையின் 72 விமானங்கள் பங்கேற்க உள்ளன. இதுகுறித்து நேற்று தாம்பரம் விமானப்படை பயிற்சி மையத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய விமானப்படை துணை தளபதி பிரேம்குமார் கூறியதாவது:

92வது விமானப்படை தினத்தை முன்னிட்டு வரும் அக்டோபர் 6ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் விமானப்படை வான்வழி சாகச நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. சென்னை மெரினா கடற்கரையில் இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது மகிழ்ச்சியாக உள்ளது.  இதுவரை டெல்லியில் நடைபெற்று வந்த விமான படை வான்வழி சாகச நிகழ்ச்சி தற்போது சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறுகிறது.

இதற்கு முன்னர் சென்னையில் கடந்த 2003ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் இதுபோன்ற விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பின்னர் சுமார் 21 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் சென்னையில் பிரம்மாண்டமான விமான சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது. அக்டோபர் 6ம் தேதி காலை 11 மணி முதல் 1 மணி வரை இந்த சாகச நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதில் அரக்கோணம், பெங்களூரு, தஞ்சாவூர், சூளுர், தாம்பரம் ஆகிய பகுதிகளில் இருந்து ஆதிநவீன ரபேல் விமானம் உட்பட 72 போர் விமானங்கள் பங்கேற்க உள்ளன.

அதேபோல் அக்டோபர் 8ம் தேதி தாம்பரம் விமானப்படை தளத்தில் வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி காலை 7:30 மணி முதல் 11 மணி வரை நடத்தப்பட உள்ளது. விமான சாகச நிகழ்ச்சிகளை கோவளம் கடற்கரை முதல் ஐஎன்எஸ் அடையாறு வரை கடற்கரையில் எந்தப் பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் எளிதாக கண்டுகளிக்க முடியும்.

விமான சாகச நிகழ்ச்சியை காண்பதற்கு சென்னை மெரினாவில் சுமார் 15 லட்சம் மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். இதனை லிம்கா உலக சாதனையாக நிகழ்த்த உள்ளோம். சென்னையில் நடத்த ஏற்பாடாகி வரும் இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறது.

The post விமானப்படை தினத்தை முன்னிட்டு வரும் 6ம் தேதி மெரினாவில் வான்வழி சாகச நிகழ்ச்சி: 15 லட்சம் பேர் கண்டு ரசிக்க ஏற்பாடு, விமானப்படை துணை தளபதி பிரேம்குமார் தகவல் appeared first on Dinakaran.

Tags : Air Force Day ,Marina ,Air ,Deputy ,Commander ,Premkumar ,CHENNAI ,92nd Indian Air Force Day ,Indian Air Force ,Chennai Marina Beach ,Vice ,
× RELATED சென்னை மெரினாவில் காவலர்களிடம் தகராறு; சிறையில் உள்ள ஜோடிக்கு ஜாமின்!