* செல்போனை போலீசிடம் ஒப்படைக்க வேண்டும், பஞ்சாமிர்த அவதூறு வழக்கில் நீதிபதிகள் அதிரடி
மதுரை: பஞ்சாமிர்தம் குறித்து உண்மைத்தன்மையை உறுதி செய்யாமல் பதிவிட்டால், சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேற்ற உத்தரவிட நேரிடும் என்று பாஜ நிர்வாகிக்கு ஐகோர்ட் கிளை எச்சரித்து உள்ளது. பழநி பஞ்சாமிர்தம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக கோவையைச் சேர்ந்த பாஜ தொழில் பிரிவு துணைத்தலைவர் செல்வகுமார் மீது கோயில் நிர்வாகம் அளித்த புகாரின்படி பழநி அடிவாரம் போலீசார் செல்வகுமார் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி செல்வகுமார், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். இந்த மனு நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் அன்புநிதி ஆஜராகி, ‘‘மனுதாரர் மூன்றாவது முறையாக இதுபோன்ற தவறினை செய்துள்ளார். எனவே, அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது’’ என்றார். இதையடுத்து நீதிபதி, ‘மனுதாரர் வாய்ச்சொல் வீரராக இல்லாமல் நிஜத்தில் சேவைகளை செய்ய வேண்டும்.
சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதற்கு முன் அதன் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த மனுதாரர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அரசு தரப்பில் அவர் பகிர்ந்த தகவல் தவறானது என்றும், பழநி பஞ்சாமிர்தம் தயாரிப்பதற்காக ஆவினில் இருந்து மட்டுமே நெய் வாங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எப்போதும் உறுதி செய்த தகவலைத் தான் பகிர வேண்டும். மனுதாரர் பழநி அடிவாரம் காவல் நிலையத்தில் 3 வாரங்களுக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும்.
விசாரணைக்காக அவரது செல்போனை போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும். மனுதாரர் செய்த பதிவை அழிப்பதுடன், தனது பதிவு உண்மை தன்மையை உறுதி செய்யாமல் பதிவிடப்பட்டது என சமூக வலைதளங்களில் தெரிவிக்க வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கப்படுகிறது. இதுபோல தொடர்ந்து பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டால், சமூக ஊடகங்களில் இருந்து வெளியேற்ற உத்தரவிட நேரிடும் எனக் கூறி மனுவை முடித்து வைத்தார்.
The post உண்மைத்தன்மையை உறுதி செய்யாமல் பதிவிடுவதா? பாஜ நிர்வாகியை சமூக ஊடகங்களில் இருந்து வெளியேற்ற உத்தரவிட நேரிடும் appeared first on Dinakaran.