* ஐவருக்கு 5 ஆயுள், இருவருக்கு இரட்டை ஆயுள்
* நெல்லை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
நெல்லை: சங்கரன்கோவில் அருகே புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 3 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், 4 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து நெல்லை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்தது. தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடம் உடைப்பன்குளம் பகுதியில் கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, மற்றொரு சமூகத்தினர் வசிக்கும் பகுதியில் ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அப்போது இரு சமூகத்தினருக்கும் இடையே ேமாதல் ஏற்பட்டு முன்விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில் உடைப்பன்குளம் பகுதியில் நடந்த ஒரு விசேஷ நிகழ்ச்சிக்கு, கோவை மாவட்டத்தை சேர்ந்த வேணுகோபால், முருகன் ஆகியோர் வந்தனர்.
பின்னர் நிகழ்ச்சி முடிந்து 2014 மே 5ம் தேதி இரவு 10 மணிக்கு உடைப்பன்குளத்தை சேர்ந்த முருகனின் சகோதரர் காளிராஜ் என்பவது பைக்கில் சங்கரன்கோவில் பஸ் ஸ்டாண்டிற்கு பஸ் ஏறச் சென்றனர். திருவேங்கடம் சித்த மருத்துவமனை அருகே வந்த அவர்களை வழிமறித்த, அந்த பகுதியைச் சேர்ந்த பொன்னுமணி, குட்டிராஜ் என்ற பரமசிவன், குருசாமி, கண்ணன் உள்பட 25 பேர் கொண்ட கும்பல், வேணுகோபால், முருகன், காளிராஜ் ஆகிய மூவரையும் வெட்டிக் கொலை செய்தது. இதுகுறித்து திருவேங்கடம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி பொன்னுமணி, குட்டிராஜ் என்ற பரமசிவன், குருசாமி, செல்லையா மகன் கண்ணன், உலக்கன், காளிராஜ் என்ற தங்கராஜ், வேலுச்சாமி மகன் கண்ணன், முருகன் என்ற பாலமுருகன், முத்துகிருஷ்ணன், ஜெயராமன், முருகன், செல்வராஜ், பொன்ராஜ், சரவணன், சுப்புராஜ், மாரிராஜ், ரமேஷ், கருப்பசாமி, பாலசுப்பிரமணியன், ஜெயா, கணேசமூர்த்தி, கணபதி மகன் கருப்பசாமி, சுரேஷ் உள்ளிட்ட 25 பேரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இந்த வழக்கு நெல்லை மாவட்ட 2வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு நிலுவையில் இருந்த போது வழக்கு தொடர்புடைய ஜெயராமன், பொன்ராஜ், சரவணன் ஆகிய மூவரும் இறந்து விட்டனர். இதைத் தொடர்ந்து 22 பேர் மீது வழக்கு விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில் கடந்த 24ம் தேதி நெல்லை 2வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி சுரேஷ்குமார் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கில் தொடர்புடைய பொன்னுமணி, குட்டிராஜ் என்ற பரமசிவன், குருசாமி, கண்ணன், உலக்கன் என்ற முத்துசாமி, காளிராஜ் என்ற தங்கராஜ், வேல்சாமி மகன் கண்ணன், முருகன் என்ற பாலமுருகன், முத்துகிருஷ்ணன், செல்லையா மகன் கண்ணன், சுரேஷ்குமார் ஆகிய 11 பேரை குற்றவாளிகள் என்று நீதிபதி சுரேஷ்குமார் அறிவித்தார்.
மற்ற 11 பேரும் விடுவிக்கப்பட்டனர். குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 11 பேருக்கும் தண்டனை விவரம் நேற்றிரவு 8.30 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதில் பொன்னுமணி, குருசாமி, காளிராஜ், முத்துகிருஷ்ணன் ஆகிய 4 பேருக்கும் மரண தண்டனையும், தலா ரூ1.25 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. குட்டிராஜா(எ) பரமசிவம், கண்ணன், உலக்கன் முத்துசாமி, மற்றொரு கண்ணன், முருகன்(எ) பாலமுருகன் ஆகிய 5 பேருக்கு தலா 5 ஆயுள் தண்டனையும், தலா ரூ1.15 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. கண்ணன், சுரேஷ் ஆகிய இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனையும், தலா ரூ1.10 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி சுரேஷ்குமார் தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கந்தசாமி ஆஜரானார். தண்டனை விதிக்கப்பட்ட 11 பேரையும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பாளை சிறைக்கு அழைத்து சென்றனர்.
The post புத்தாண்டு கொண்டாட்ட முன்விரோதத்தில் 3 பேர் கொலை ; 4 பேருக்கு தூக்கு தண்டனை appeared first on Dinakaran.