×
Saravana Stores

டிஜிட்டல் சாதன திரைகளால் வரும் அபாயம்; 40% பேரை தாக்கும் கண் வறட்சி பாதிப்புகள்: ஆய்வுகளில் அதிர்ச்சி தகவல்

* நடுத்தர வயதினருக்கே அதிகம்

கண் வறட்சி என்பது தற்போது அதிகளவில் மக்களை தாக்கும் ஒரு பாதிப்பாக உருவெடுத்து வருகிறது. சுற்றுச்சூழலில் வறட்சி, காற்று அல்லது தூசி போன்ற வெளிப்புற காரணிகளால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. அதே போல் டிஜிட்டல் சாதன திரைகளை நீண்ட நேரம் பார்ப்பதாலும், மொபைல் பயன்படுத்துவதன் மூலமும் கண் வறட்சி நிலை மேலும் மோசமாகும். கணினியை உற்றுப் பார்க்கும்போது நாம் கண் சிமிட்டும் எண்ணிக்கை குறைகிறது. கண் சிமிட்டுதல் என்பது கண்களைச் சுத்தப்படுத்தவும் கண்ணீரை சீராக விநியோகிக்கவும் தேவையான ஒரு செயலாகும். கண் சிமிட்டுவது குறையும் போது கண்ணீர் அடுக்கின் ஆவியாதல் செயல்முறை வேகமடைகிறது. இந்த வகையில் உலக மக்கள் தொகையில் 5 முதல் 40 சதவீதம் வரையிலான மக்களை பாதிக்கிறது கண் வறட்சி என்று தெரிவித்துள்ளது சமீபத்திய ஆய்வுகள்.

கண் வறட்சியால் ஆண்களை விடப் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். 50 வயதுகளின் நடுப்பகுதியில் உள்ளவர்கள், உலர் கண்கள் பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக மாதவிடாய் நிறுத்தத்தை நெருங்கும் பெண்களுக்கு கண்கள் எளிதில் வறண்டு போகிறது. இது ஒருபுறம் இருந்தாலும், டிஜிட்டல் சாதனங்களை அதிகமாகப் பயன்படுத்துவதால், பிரச்னை இளம் வயதிலேயே தோன்றத் தொடங்குகிறது. உலர் கண்கள் பிரச்னைக்கான முக்கிய காரணிகள் தற்போதைய வாழ்க்கை முறையுடன் தொடர்புடையது என்றும் ஆய்வுகள் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கண் மருத்துவ நிபுணர்கள் மேலும் கூறியதாவது: உலர் கண் என்பது கண்களின் கண்ணீர் படலத்தை மாற்றியமைக்கும் தொடர்ச்சியான காரணங்களின் விளைவாகும். இந்தப் படலம் மூன்று அடுக்குகளால் ஆனது.

ஒரு கொழுப்பு அடுக்கு, ஒரு நீர் அடுக்கு, மற்றும் ஒரு மியூகோசல் அடுக்குகள் கொண்டது. இந்த கண்ணீர் படலத்தின் மூன்று அடுக்குகளில் பல காரணிகளால் மாற்றம் ஏற்படும். இது கண்கள் வறண்டு போக வழிவகுக்கும். கண்ணின் மேற்பரப்பை மென்மையாகவும் சுத்தமாகவும் பராமரிக்க மூன்று கூறுகளும் இணைந்து செயல்படுகின்றன. இந்த மூன்று அடுக்குகளில் ஏதேனும் இடையூறு ஏற்பட்டால், கண்கள் வறண்டு போகலாம். கண்ணீர் படலச் செயலிழப்புக்கு மிகவும் பொதுவான காரணமாக பார்க்கப்படுவது மீபோமியன் சுரப்பி செயலிழப்பு தான். இருப்பினும் ஆட்டோ இம்யூன் நோய்கள், சில மருந்துகளின் நுகர்வு போன்ற பிற காரணங்களும் உள்ளன. காண்டாக்ட் லென்ஸ்கள் பயன்படுத்துவது மற்றும் ஹார்மோன் மாற்றங்களால் கூட கண்ணீர் படல அடுக்குகள் பாதிக்கப்படலாம். மீபோமியன் என்னும் சுரப்பிகள் கண் இமைகளில் அமைந்துள்ளன.

இந்தச் சுரப்பிகள் சரியாக வேலை செய்யாதபோது, ​​கண்ணீர் அடுக்கு நிலையற்றதாகி, எதிர்பார்த்ததை விட வேகமாக மறைந்துவிடும். உலர் கண் பிரச்னை, ஆரம்பத்தில் குறிப்பிட்ட சில அறிகுறிகளுடன், கூடுதலான பாதிப்புகளையும் ஏற்படுத்தும். பார்வை மங்கல், கண்கள் சிவத்தல் போன்றவை இதற்கான அறிகுறிகளாகும். நடுத்தர வயதினர் உலர் கண்கள் பிரச்னையால் எளிதில் பாதிக்கப்படுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே, பாதிப்புகளை தவிர்க்க நீண்ட நேரப் பணிகளைச் செய்யும்போது நமது கண்களுக்கு அடிக்கடி ஓய்வு கொடுக்க வேண்டும். கண்ணீர் ஆவியாவதைக் குறைக்க வறண்ட சூழல்களில் கண்களை அடிக்கடி சிமிட்ட வேண்டும். இமைகளை உயர்த்தி பார்ப்பதை குறைக்க வேண்டும். கணினித் திரையை கண் மட்டத்திற்குக் கீழே இருக்குமாறு தாழ்த்தி வைத்துக் கொள்ள வேண்டும்.

இதேபோல் புகை பிடிப்பதை விட்டு விட வேண்டும். மற்றவர்கள் புகைபிடிக்கும் போது அருகில் செல்லாமல் இருப்பதும் மிகவும் நல்லது. வெது வெதுப்பான நீரில் நனைத்த துண்டை வைத்து கண் இமைகளை சுத்தம் செய்து, கண்களைச் சுற்றியுள்ள பகுதியில் லேசாக அழுத்தம் தர வேண்டும். இப்படிச் செய்வதால் கண்ணைச் சுற்றியுள்ள சுரப்பிகள் உற்பத்தி செய்யும் கொழுப்புகள் கரைகிறது. சுரப்பிகளில் உள்ள கொழுப்புகளை வெளியே தள்ள உங்கள் விரல் அல்லது பருத்தியால் கண் இமைகளை மெதுவாக மசாஜ் செய்வதும் நல்லது. இந்த எளிய நடவடிக்கைகள், கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். இவ்வாறு கண்மருத்துவ நிபுணர்கள் கூறினர்.

கண் ‘மை’யால் தீர்வு கிடைக்காது
“உடல் உறுப்புகளில் கண்கள் மிகவும் மென்மையானவை. அதோடு மிகவும் முக்கியமானதாகவும் இருக்கிறது. அதைக் கவனமாகப் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம். கண்ணில் தூசி போன்றவை படியும்போது கண் எரிச்சல், கண் கட்டி போன்றவை ஏற்படுகிறது. இதற்கு கண் மை போடுவது தீர்வாகுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சில ஒப்பனை சாதனங்களில், குறிப்பாக கண் மைகளைத் தயாரிக்கும்போது ஈயம் கலக்கப்படுகிறது. அவை அடர்த்தியான கருமையுடன் இருக்க கார்பன் பிளாக் மற்றும் செயற்கை சாயங்கள் சேர்க்கப்படுகின்றன. மேலும் கண் மை பல ஆண்டுகளுக்குக் கெடாமல் இருப்பதற்காக பார்மால்டிஹைட் போன்ற பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. மென்மையான கண்களில் இதுபோன்ற வேதிப் பொருட்கள் அடங்கிய சாதனங்களைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தும்போது கண்களில் இத்தகைய பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது,’’ என்பதும் ஆய்வுகளில் வெளியிடப்பட்டுள்ள தகவல்.

பேட்ச் டெஸ்ட் அவசியம்
அழகுக்கலை நிபுணர்கள் கூறுகையில் ‘‘இப்போதெல்லாம், கண் மை அழியாமல் இருப்பதற்கும், கருமை நிறம் அடர்த்தியாக வருவதற்காகவும் ஈயம், செயற்கைக் கரிமம் போன்ற வேதிப் பொருட்கள் அதிகம் சேர்க்கப்படுகிறது. இத்தகைய வேதிப்பொருட்கள் நிறைந்த ஒப்பனைப் பொருட்கள் சிலருக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும். ஆகையால், அவற்றைப் பயன்படுத்தத் தொடங்கும் முன்பாக ‘பேட்ச் டெஸ்ட்’ செய்து பார்த்துவிட்டுத் தொடங்க வேண்டும். அதாவது, எந்த ஒப்பனைப் பொருளாக இருந்தாலும், அதை மிகச் சிறிய அளவில் உடலின் ஒரு சிறு பகுதியில் பயன்படுத்திப் பார்த்து, அதனால் எந்தவித விளைவுகளும் இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்,’’ என்று அறிவுறுத்தி உள்ளனர்.

இவற்றை எல்லாம் பாலோ செய்யணும்
கண்ணில் கட்டி, எரிச்சல் போன்ற அறிகுறிகள் தென்படும்போது, ஒரு நாளைக்கு இரண்டு முறை கண் இமைகளைச் சுத்தம் செய்ய வேண்டும். மேலும், அறிகுறிகள் குறைந்தாலும், கண்களைத் தொடர்ந்து சுத்தம் செய்ய வேண்டும். சோப், பேஸ்வாஷ் போன்றவை கண்ணுக்குள் செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வெறும் தண்ணீர் கொண்டே கண்ணைச் சுத்தம் செய்ய வேண்டும். கண்களுக்கு உள்ளே அல்லது அதைச் சுற்றி கட்டி ஏற்பட்டால் நாமக்கட்டி, சந்தனம், விளக்கெண்ணெய் போன்றவற்றைப் பயன்படுத்த கூடாது. கண் சிவப்பாகவோ அல்லது அதில் ஏதேனும் எரிச்சல் ஏற்பட்டாலோ, உடனடியாக கண் மருத்துவரை அணுக வேண்டும். மருத்துவப் பரிசோதனை செய்து அதற்கேற்ற சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர் கண்மருத்துவ நிபுணர்கள்.

The post டிஜிட்டல் சாதன திரைகளால் வரும் அபாயம்; 40% பேரை தாக்கும் கண் வறட்சி பாதிப்புகள்: ஆய்வுகளில் அதிர்ச்சி தகவல் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED உன்னத உறவுகள்