* பருவமழைக்கு முன்னதாக பணிகளை முடிக்க கோரிக்கை
* கூடுதல் செலவும் கால விரையமும்
சென்னையில் மாநகர பேருந்துகளை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கையை விட சென்னை புறநகர் மின்சார ரயில்களை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை மிக அதிகம். பொதுமக்கள், வேலைக்கு செல்பவர்கள், பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் என அனைத்து தரப்பு மக்களின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்வதில் மின்சார ரயில்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.
உதாரணமாக ஒரு நாளைக்கு மின்சார ரயில் சேவை நிறுத்தப்பட்டால் சென்னை மாநகரமே திக்குமுக்காடிவிடும். சென்னை கடற்கரை- தாம்பரம், செங்கல்பட்டு, சென்ட்ரல்- அரக்கோணம், சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி, கடற்கரை-வேளச்சேரி என ஆகிய ரயில் சேவை சென்னையில் உள்ள முக்கிய பகுதிகளை இணைக்கிறது. இதில் சென்னை கடற்கரை – வேளச்சேரி வழித்தடம் முக்கியமான வழித் தடமாக உள்ளது. இந்த வழித்தடத்தில் மட்டும் கிட்டத்தட்ட 18 ரயில் நிலையங்கள் உள்ளன. மேலும் அந்த ரயில் ரயில் நிலையங்களை ஒட்டி அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்டவை அமைந்துள்ளதால், இந்த வழித்தடத்தில் ஓடும் மின்சார ரயில்கள் எப்போதும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்கு முன்பு வரை, இந்த வழித்தடத்தில் நாள்தோறும் சுமார் 1 லட்சம் பேர் பயணம் செய்து வந்தனர்.
இந்நிலையில் சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே சுமார் 279 கோடி ரூபாய் செலவில் 4வது ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் முதல் கடற்கரை – சிந்தாதிரிப்பேட்டை இடையே ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. ரயில் பயணிகள் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக சென்னை கடற்கரைக்கு பதிலாக சிந்தாதிரிபேட்டை- வேளச்சேரி, மற்றும் வேளச்சேரி-சிந்தாதிரிப்பேட்டை வரை மட்டுமே பறக்கும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் வேலைக்கு செல்வோர், சென்டரல் ரயில்களுக்கு செல்லும் மக்கள், மருத்துவமனைகள், ஐடி நிறுவனங்கள், கல்லூரிகளுக்கு செல்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த 4வது ரயில் பாதை அமைக்கும் பணி மிகவும் மந்தமாக நடைபெற்று வருவதாக பயணிகளால் குற்றம் சாட்டப்படுகிறது.
கடந்த மார்ச் மாதத்துக்குள் பணிகள் முடிந்திருக்க வேண்டும், ஆனால் அது தாமதமானது. அதற்கு பிறகு ஜூலை மாதம் முடியும் என்று ரயில்வே துறை தெரிவித்தது. ஆனால் அதுவும் முடியவில்லை. தற்போது அக்டோபர் மாதம் பயன்பாட்டுக்கு வரும் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிகாரிகள் நிலத்தை கையகப்படுத்துவதில் மந்தமாக செயல்பட்டதாலும், முறையாக திட்டமிடல் இல்லாததுமே தாமதத்திற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்திய கடற்படையினரிடம் இருந்து 110 மீட்டர் நிலம், ரயில் பாதை அமைக்க அனுமதி பெற வேண்டும். இதற்கான அனுமதி பெறுவதிலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பிட்ட திட்டமில்லாமல், 4வது ரயில் பாதை அமைக்கும் பணி நீண்ட நாட்களாக நடைபெற்று வருவதால் மக்கள் தாங்க முடியாத அளவில் துயரங்களை சந்தித்து வருகின்றனர்.
வேலைக்கு செல்லும் பெண்கள், இளைஞர்கள் மிக அதிக அளவில் சிரமப்படுகின்றனர். ஏனென்றால் டைடல் பார்க், பெருங்குடி, திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் ஐடி நிறுவனங்கள் உள்ளன. இதற்காக பெரம்பூர், ராயபுரம் உள்ளிட்ட வடசென்னை பகுதிகளில் இருந்து ஊழியர்கள் சிந்தாதிரிபேட்டை வந்து, ரயில்கள் வழியாக தங்களது நிறுவனத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல வேண்டும். இது பொதுவாக கடற்கரையில் இருந்து செல்லும் பயணத்தை விட 1 அல்லது 2 மணி நேரம் கூடுதலாக இருக்கிறது என அங்கலாய்க்கின்றனர். இது தொடர்பாக ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் விக்னேஷ் கூறியதாவது: இந்த ரயில் பாதை பணி தாமதமாவதால் ஐடி ஊழியர்களாகிய நாங்கள் மிகச் சிரமப்படுகிறோம். குறிப்பாக பேஷன் பிரிட்ஜ் பகுதியில் வசிக்கும் என்னைப் போன்றவர்கள் வேகவேகமாக பஸ் பிடித்து, சிந்தாதிரிப்பேட்டைக்கு வந்து, அங்கிருந்து பெருங்குடியில் உள்ள அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டும்.
இதனால் எனக்கு கிட்டத்தட்ட கூடுதலாக 2 மணி நேரம் பயணம் நேரம் அதிகரிக்கிறது. முன்பெல்லாம் 15 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இருந்தது. தற்போது 30 நிமிடத்துக்கு ஒரு முறைதான் ரயில் வருகிறது. இதனால் காத்திருக்கும் நேரம், காலவிரையம் ஏற்படுகிறது. மேலும் இனி மழைக்காலம் என்பதால் பயணம் மிக சவாலாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். அதேநேரத்தில் சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து பெண்களுக்கு சிறப்பு பேருந்து கூடுதலாக இயக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் எழுந்துள்ளது. இது தொடர்பாக வேளச்சேரி ஏஜிஎஸ் காலனி மக்கள் நலச்சங்கத்தின் செயலாளர் கீதா கணேஷ் கூறியதாவது: வேளச்சேரியில் இருந்து பல்வேறு பணிகளுக்கு வட சென்னைக்கு அல்லது சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு செல்லும் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். குறிப்பாக பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.
வீடு பணிகளை முடித்துவிட்டு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு இது மிகவும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு போதிய பேருந்துகள் இல்லாததால் அனைத்து பேருந்துகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. எனவே பெண்களுக்கென தனி பேருந்துகள் அதிக அளவில் இயக்க வேண்டும். மற்றொரு பிரச்னையாக ஆதம்பாக்கம் – வேளச்சேரி ரயில் நிலையம் அமைக்கும் பணி தாமதமாக நடைபெற்று வருகிறது. இந்த பணி சீக்கிரம் முடிந்தால் வேளச்சேரியில் இருந்து ஆதம்பாக்கம் சென்று, அங்கிருந்து வேறு பகுதிகளுக்கு எளிதாக செல்ல முடியும். எனவே வேளச்சேரி- கடற்கரை ரயில் வழித்தடத்தை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை புறநகர் பகுதிகளான திருவள்ளூர், பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நேரடியாக வேளச்சேரி, டைடல் பார்க் உள்ளிட்ட பகுதிகளுக்கு பணிக்காக வரும் மக்கள், வழக்கமாக ஒரே பயண அட்டை வைத்து பயணித்து வந்தனர். தற்பொழுது சென்ட்ரல் வரை மட்டும் அந்தப் பயண அட்டையை பயன்படுத்திவிட்டு, அங்கு இருந்து பேருந்து அல்லது ஆட்டோவில் சிந்தாதிரிப்பேட்டை வந்து, மீண்டும் அங்கிருந்து பணிக்குச் செல்ல வேண்டும். இதனால் கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. 25 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படுவதால் அலுவலகம் செல்வோர் அந்த ரயிலை தவறவிட்டால் தனியார் ஆட்டோ, டாக்ஸி, ராப்பிடோ உள்ளிட்ட வாகனங்களை பயன்படுத்தி செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் கூடுதல் செலவு ஏற்படுகிறது என மக்கள் தெரிவிக்கின்றனர்.
பேருந்துகளில் தொங்கிச்செல்லும் கூட்டம்
சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இருப்பினும் அனைத்து பேருந்துகளும் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக 32c பேருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் வழியாக வள்ளலார் நகர் வரை இயங்குகிறது. இந்த பேருந்து அனைத்திலும் மக்கள் தொங்கியபடி செல்கின்றனர். அதுமட்டுமின்றி ரயில் நடைமேடைக்கு வந்த உடன் அவசரமாக அந்த பேருந்தில் இடம் பிடிக்க முண்டியடித்து ஏறுகின்றனர். அதே போல சிம்சன் பேருந்து நிறுத்தத்தில் காலை மற்றும் மாலை நேரத்தில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
The post சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே ரயில் பாதை அமைக்கும் பணியில் தொய்வு: மந்தமான பணியால் பொதுமக்கள் அவதி appeared first on Dinakaran.