×
Saravana Stores

சென்னை விமான நிலையத்தில் அபிவிருத்தி பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்: அமைச்சர் டிஆர்பி.ராஜா பங்கேற்பு

சென்னை: சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை, தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தலைமையில், சென்னை விமான நிலைய அபிவிருத்தி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் இந்திய விமான நிலைய ஆணையத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு தொழில்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது சென்னை விமான நிலையத்தில் பயணிகள் போக்குவரத்து, சரக்குகள் கையாளுவது போன்றவற்றை மேலும் அபிவிருத்தி செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்தை அதிகமான சர்வதேச விமானங்கள் வந்து செல்லும் அளவுக்கு தரத்தை மேலும் மேம்படுத்துவது குறிக்கும் ஆலோசிக்கப்பட்டது. மேலும் இரண்டாவது ஓடு பாதை நீளம் அதிகரிக்கப்பட்டு, அந்த ஓடு பாதையை முழு அளவில் பயன்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடந்தது.

அதோடு முக்கியமாக சென்னை விமான நிலைய வளாகத்திற்குள் கூடுதலாக ஒரு முனையம் அமைக்கப்பட்டு, அந்த முனையத்தில் சரக்கு போக்குவரத்தை அதிகளவில் கையாளுவது குறித்தும், அந்த முனையத்திலிருந்து, என்எச் 32 தேசிய நெடுஞ்சாலைக்கு இணைப்பு சாலை அமைப்பது குறித்தும், அதன் மூலம் சென்னை விமான நிலைய சரக்கக பகுதிக்கு வரும் வாகனங்கள் மீனம்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் வந்து போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்ளாமல், விமான நிலையத்தின் பின்பக்கம் வழியாக வந்து செல்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்தின் அபிவிருத்தி பணிகளுக்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்தார்.

The post சென்னை விமான நிலையத்தில் அபிவிருத்தி பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்: அமைச்சர் டிஆர்பி.ராஜா பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Chennai Airport ,Minister ,TRP Raja ,CHENNAI ,Tamil Nadu Industries ,Airports Authority of India ,Dinakaran ,
× RELATED சென்னை விமான நிலையத்தில் 453 ஆமைகள் பறிமுதல்