×
Saravana Stores

471 நாட்கள் கைது முதல் ஜாமீன் வரை: செந்தில் பாலாஜி வழக்கு கடந்து வந்த பாதை


சென்னை: 471 நாட்களுக்குப் பிறகு சிறையில் இருந்து வெளியில் வந்த செந்தில் பாலாஜியின் அரசியல் நடவடிக்கைகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் முக்கிய அமைச்சராக வலம் வந்த செந்தில் பாலாஜி கடந்த 2014ம் ஆண்டு, போக்குவரத்துத் துறையில் ஓட்டுநர், நடத்துநர் பணி நியமனத்தில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரில் சிக்கினார். 2015ம் ஆண்டு தேவசகாயம் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் இதில் செந்தில் பாலாஜி பெயர் இடம்பெறவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதன் அடிப்படையில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் உள்பட 40 பேர் மீது 2016ல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பண மோசடி தொடர்பாக செந்தில் பாலாஜி மீது கடந்த 2016ம் ஆண்டு அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், இருதரப்பிலும் சமரசம் ஏற்பட்டுவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது. இதை எதிர்த்து போலீஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சமரசம் ஏற்பட்டதால் பணம் கைமாறியது உறுதியாகிறது என்றும் இதனால் மீண்டும் விசாரணை நடத்தவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கில் நேரில் ஆஜராகும்படி செந்தில் பாலாஜிக்கு கடந்த 2019ல் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அமலாக்கத்துறையால் அனுப்பிய இந்த சம்மன் சென்னை உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது.

கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்ட செந்தில் பாலாஜி வெற்றி பெற்று திமுக அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். இந்த சூழ்நிலையில், உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிகாரி கார்த்திக் தசாரி மேல் முறையீடு செய்தார். தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறி செந்தில் பாலாஜி கடந்த 2022ல் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் 16ம் தேதி இந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ணா முராரி, ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கை இரண்டு மாதத்திற்குள் முடிக்கும்படி குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டது.

சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் 13ம் தேதி, சென்னை பசுமை வழிசாலையில் உள்ள அவரது அரசு இல்லத்தில் அமலாக்கத் துறையினர் நாள் முழுவதும் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தினர். அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். வீட்டிலிருந்த செந்தில் பாலாஜி எங்கும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. அவரை சந்திக்க யாரையும் அனுமதிக்கவில்லை. தொடர்ந்து அவரிடம் 17 மணி நேரம் நடத்திய விசாரணையின்போது அவரை அடித்து துன்புறுத்தியதாகவும், அவருக்கு கடுமையான மன அழுத்தத்தை அமலாக்கத் துறையினர் ஏற்படுத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதையடுத்து, 14ம் தேதி அதிகாலை செந்தில்பாலாஜியை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்துக்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்படும்போது போது செந்தில் பாலாஜி திடீரென கடும் நெஞ்சு வலியால் அலறித் துடித்தார். இதையடுத்து, உடனடியாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோகிராம் பரிசோதனையில், இதயத்துக்கு செல்லும் முக்கிய ரத்தக் குழாய்களில் அடைப்பு இருப்பது தெரியவந்ததால், அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். கே.கே. நகர் இஎஸ்ஐ மருத்துவர்கள், அப்போலோ மருத்துவமனையின் மூத்த இதய சிகிச்சை நிபுணர் ஜி.செங்கோட்டுவேலு ஆகியோரும் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். செந்தில் பாலாஜியின் மனைவி கேட்டுக் கொண்டதால், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 15ம் தேதி ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார்.

காவேரி மருத்துவமனையில் அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதை தொடர்ந்து அவர் காவேரி மருத்துவமனையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்தும் அவரை துன்புறுத்தியதாகவும், கைதின் போது சட்ட விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும், மனித உரிமை மீறல் நடந்துள்ளதாகவும் புகார் எழுந்தது. சக அமைச்சர்கள், செந்தில் பாலாஜியை மருத்துவமனையில் பார்த்தபோது கைது செய்தபோது அமலாக்கத்துறை அதிகாரிகள் துன்புறுத்தியுள்ளனர் எனக் குறிப்பிட்டனர். இந்த புகார்களின் அடிப்படையில் ஓமந்துரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியை மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து, ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற செந்தில் பாலாஜி, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அவரது சகோதரர் அசோக்குமார் தொடர்ந்து தலைமறைவாக இருப்பதாக கூறி ஜாமீன் வழங்க மறுத்தது. செந்தில்பாலாஜி ஜாமீன் கேட்டு தொடர்ச்சியாக தாக்கல் செய்த மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தன. இதற்கிடையே, செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதில் சட்ட விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கின.

இந்த வழக்கை விசாரித்த மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன், மேகலாவின் மனுவை தள்ளுபடி செய்தார். இதையடுத்து புழல் சிறையில் செந்தில்பாலாஜி அடைக்கப்பட்டார். இலாகா இல்லாத அமைச்சராகவும் தொடர்ந்து வந்தார்.
இந்த சூழ்நிலையில், அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதற்கு ஆளுநர் ஏற்பு தெரிவிக்காத நிலையில், தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்து அவரை அமைச்சரவையில் தொடர வைத்திருந்தது. ஆனால், செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டதற்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக எதிர்வினை ஆற்றினார். அதேபோன்று தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் ஆளுநருக்கு எதிராக தங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை.

இதை நாங்கள் சட்டரீதியாக சந்திப்போம்’ என்று தெரிவித்தார். ஆளுநர் தான்தோன்றித்தனமாக செயல்படுவதாக கூறி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பை தெரிவித்ததால், அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜியை நீக்கியதாக கூறியதை, ஆளுநர் ஆர்.என்.ரவி திரும்பப் பெற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அவரது சகோதரர் அசோக்குமார் தொடர்ந்து தலைமறைவாக இருப்பதாக கூறி ஜாமீன் வழங்க மறுத்தது. செந்தில்பாலாஜி ஜாமீன் கேட்டு தொடர்ச்சியாக தாக்கல் செய்த மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தன. செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு பிறகு ராஜினாமா செய்தார். சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும், சமூகத்தில் அதிகாரம் படைத்தவராக இருப்பதால் ஜாமீன் வழங்க முடியாது என தெரிவித்தது.

நீண்டகாலமாக சிறையில் உள்ள செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் 2024 மார்ச் 18ல் மேல் முறையீடு செய்தார். இந்த மனு மீதான விசாரணையில் செந்தில் பாலாஜி தரப்பு, அமலாக்கத் துறை தரப்பு என இருதரப்பினருக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. 2024 ஆகஸ்ட் 12ம்தேதி நடந்த விசாரணையின் போது, ‘மனுதாரர் 13 மாதங்களாக சிறையில் இருக்கிறார். தற்போது வரை இந்த வழக்கில் விசாரணை தொடங்கவில்லை. விசாரணை எப்போது தொடங்கும்’ என்பதும் தெரியவில்லை என செந்தில் பாலாஜி தரப்பு வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தது. மேலும், சுமார் 58 முறை அவருக்கு காவல் நீட்டிப்பு வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று ஜாமீன் மனு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது.

நேற்று காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கி உள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதன் மூலம் 471 நாட்களாக சிறையில் இருந்த செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளியே வந்தார்.

The post 471 நாட்கள் கைது முதல் ஜாமீன் வரை: செந்தில் பாலாஜி வழக்கு கடந்து வந்த பாதை appeared first on Dinakaran.

Tags : BALAJI ,SENTHIL ,Chennai ,Senthil Balaji ,minister ,Chief Minister ,Jayalalithaa ,
× RELATED அமைச்சர் செந்தில் பாலாஜி மீது...