* அம்பத்தூர், ஆவடியில் 13 செ.மீ. பதிவு
* சுரங்கப்பாதையில் தேங்கிய தண்ணீர் துரிதகதியில் அகற்றம்
சென்னை: சென்னையில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் மழை கொட்டி தீர்த்தது. அதிகபட்சமாக அம்பத்தூர், ஆவடி, வானகரத்தில் 13 சென்டி மீட்டர் அளவுக்கு மழை வெளுத்து வாங்கியது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக நேற்று முன்தினம் (25ம் தேதி) இரவும் மழை கொட்டித் தீர்த்தது. நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. இரவு 9 மணிக்கு மேல் பல பகுதிகளிலும் விடாமல் மழை அடித்து நொறுக்கியது. சென்னை கோயம்பேடு, அண்ணாநகர், ராயப்பேட்டை, தேனாம்பேட்டை, திருவல்லிக்கேணி, கிண்டி, ஆலந்தூர், வளசரவாக்கம், விருகம்பாக்கம், பாரிமுனை, திருமங்கலம் என நகரின் பல பகுதிகளிலும் மழை விடாமல் விளாசி தள்ளியது. திடீரென இடி மற்றும் பலத்த காற்றுடன் பெய்த மழையால் வேலை முடிந்து வீடு திரும்பியவர்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
பல இடங்களில் தண்ணீர் சாலைகளில் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. அண்ணாநகரின் சில பகுதிகள், ராயப்பேட்டையில் உள்ள சில பகுதிகள் என சென்னையின் பல சாலைகள் தண்ணீரில் தத்தளித்தன. இதனால், மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். சென்னையில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக அம்பத்தூர், ஆவடி, வானகரம் ஆகிய பகுதிகளில் 13 சென்டி மீட்டர் மழை ெவளுத்து வாங்கியது. அண்ணாநகர் மலர் காலனியில் 12 சென்டி மீட்டர், திருவாலங்காட்டில் 11 செ.மீ, மணலி 10 ெசன்டி மீட்டர் மழை பெய்துள்ளது. ஓரிரு தினங்களுக்கு முன்பு பெய்த மழையில் மணலியில் 15 செ.மீட்டர் பதிவானது. தற்போது நேற்று முன்தினம் மணலியில் 10 செ.மீட்டர் மழை பதிவானது.
சென்னையில் இரவில் பெய்த மழையால் பல சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியது. மாநகராட்சியின் நடவடிக்கையால் தண்ணீர் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டது.
குறிப்பாக கெங்குரெட்டி சுரங்கப்பாதை, துரைசாமி சுரங்கப்பாதை, எம்.சி.ரோடு சுரங்கப்பாதை, மாணிக்கம் நகர் சுரங்கப்பாதை, நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதை, வில்லிவாக்கம் சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த தண்ணீர் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டது. இதனால், போக்குவரத்து வழக்கம் போல இயங்கியது. அதே நேரத்தில் நேற்று காலையும் சென்னையில் பல இடங்களில் சாரல் மழை பெய்தது. காலை முதல் வெயிலை பார்க்க முடியாத அளவுக்கு மேகமூட்டத்துடன் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை காணப்பட்டது. மாலை வரை நல்ல கிளைமேட் நீடித்தது. இதனால், சென்னைவாசிகள் சற்று நிம்மதி அடைந்தனர்.
The post சென்னையில் நேற்று முன்தினம் இரவில் கொட்டித் தீர்த்த மழை appeared first on Dinakaran.