×
Saravana Stores

சென்னையில் இடி, மின்னலுடன் கனமழை; 35 விமானங்களின் சேவைகள் பாதிப்பு: பயணிகள் கடும் அவதி


சென்னை: சென்னையில் நேற்றுமுன்தினம் இரவு பெய்த இடி, மின்னலுடன் கூடிய கனமழையால் 35 விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் மாலையில் விட்டுவிட்டு மழை பெய்துகொண்டிருந்தது. இரவு 9 மணிக்கு மேல் மிகவும் கனமழையாக மாறி, இடி, மின்னலுடன் தொடர்ந்து பெய்தது. இதனையடுத்து சென்னை விமான நிலையத்தில், கனமழை மற்றும் இடி மின்னல் காரணமாக விமான சேவைகள் பெருமளவு பாதிக்கப்பட்டன. இரவு நேரம் என்பதால் பெங்களூர், மும்பை, விஜயவாடா, புவனேஸ்வர், கோழிக்கோடு, திருச்சி, திருவனந்தபுரம், கோலாலம்பூர் உட்பட 13 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரமாக வானில் வட்டமடித்து தத்தளித்துக் கொண்டிருந்தன.

மழை சிறிது ஓய்ந்தபோது வட்டமடித்து பறந்து கொண்டிருந்த விமானங்கள், அவசரமாக சென்னையில் தரையிறங்கின. ஆனால் திருச்சியில் இருந்து 68 பயணிகளுடன் சென்னைக்கு இரவு 10.05 மணிக்கு வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், எரிபொருள் குறைவாக இருந்த காரணத்தால், வானில் தொடர்ந்து வட்டம் அடிக்க முடியாமல் பெங்களூருக்கு திரும்பிச் சென்றது. இதேபோல் சென்னையில் இருந்து புறப்படும் விமானங்களான மும்பை, டெல்லி, ஐதராபாத், கொச்சி, கோவை, கொல்கத்தா, இந்தூர், சிங்கப்பூர், அபுதாபி, கோலாலம்பூர் உள்ளிட்ட 20 விமானங்கள் சுமார் 2 மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டுச் சென்றன.

அதோடு இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து, சென்னைக்கு வரவேண்டிய லங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும், சென்னையில் இருந்து இலங்கைக்கு புறப்பட்டுச் செல்ல வேண்டிய லங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும் ரத்து செய்யப்பட்டன. இரவு முழுவதும் பெய்த கனமழை, இடி மின்னல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 13 வருகை விமானங்கள், 20 புறப்பாடு விமானங்கள், ரத்தான 2 விமானங்கள் என மொத்தம் 35 விமான சேவைகள் பாதிக்கப்பட்டு பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

The post சென்னையில் இடி, மின்னலுடன் கனமழை; 35 விமானங்களின் சேவைகள் பாதிப்பு: பயணிகள் கடும் அவதி appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED சென்னை போரூர் அருகே மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை