×
Saravana Stores

பிரதமர் மோடியை இன்று நேரில் சந்தித்து பேச முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றார்: விமான நிலையத்தில் பிரமாண்ட வரவேற்பு

சென்னை: பிரதமர் மோடியை நேரில் சந்தித்து, தமிழக வளர்ச்சிக்கான நிதியை கேட்டு பெற முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு டெல்லி சென்றார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடியை முதல்வர் சந்தித்துப் பேசுகிறார். அமெரிக்காவில் இருந்து இம்மாதம் 14ம் தேதி சென்னை திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின் நிருபர்களை சந்தித்து பேசுகையில், பிரதமர் மோடியை சந்திப்பதற்காக விரைவில் டெல்லி செல்ல இருப்பதாகவும், அப்போது தமிழக வளர்ச்சிக்கான திட்டங்களுக்கு நிதியை கேட்க இருப்பதாகவும் கூறினார். இந்த அறிவிப்பை தொடர்ந்து நேற்று மாலை 5.38 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டு சென்றார்.

சென்னை பழைய விமான நிலையம் கேட் எண் 6 பகுதியில், தமிழக அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், கட்சி பிரமுகர்கள், அதிகாரிகள் முதல்வரை வழி அனுப்பி வைத்தனர். முதல்வருடன், தமிழக தலைமை செயலாளர் முருகானந்தம் மற்றும் உதவியாளர், பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோரும் டெல்லி சென்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு 8.30 மணிக்கு டெல்லி விமான நிலையம் சென்றடைந்தார். டெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் வந்து இறங்கிய முதல்வருக்கு டெல்லிக்கான சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், கனிமொழி, திருச்சி சிவா, ஆ.ராசா, கனிமொழி சோமு, வில்சன், எம்.எம்.அப்துல்லா ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு புத்தகங்கள், பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் வரவேற்றனர்.

இதையடுத்து சாணக்கியாபுரியில் இருக்கும் புதிய தமிழ்நாடு இல்லத்திற்கு சென்றார். பின்னர், தமிழ்நாடு விருந்தினர் மாளிகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு தங்கினார். இதைத்தொடர்ந்து, இன்று காலை 11 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் நலத்திட்டங்களுக்கு வழங்க வேண்டிய நிதிகளை விடுவிக்க கோரும் மனுவை அவர் பிரதமரிடம் அளிக்க உள்ளார். குறிப்பாக, மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கும்படி ஒன்றிய அரசிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கப்படாமல் உள்ளது. எனவே, இதுகுறித்து பிரதமரிடம் முதல்வர் விவாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் எஸ்எஸ்ஏ திட்டத்தின் கீழ் கல்விக்காக வழங்க வேண்டிய ஒன்றிய அரசின் பங்கை தராமல் தாமதித்து வருவதையும், தேசிய கல்வி கொள்கையை வலுக்கட்டாயமாக ஏற்க வைப்பதற்காக மாநிலங்களுக்கு நிதியை மறுத்து வருவதையும் இச்சந்திப்பின் வாயிலாக பிதமரிடம் முதல்வர் எடுத்துரைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நீட் தேர்வுக்கு விலக்கு, ஜிஎஸ்டி நிலுவை தொகை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்தும் அப்போது விவாதிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். பிரதமர் மோடியை சந்தித்து பேசிய பிறகு, முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் நிருபர்களை இன்று பிற்பகல் சந்தித்து பேசவும் திட்டமிட்டுள்ளார். பின்னர் இன்று (வெள்ளி) மாலை 5.15 மணிக்கு, டெல்லியில் இருந்து விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் புறப்பட்டு, இரவு 8.20 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வந்து சேர்கிறார்.

The post பிரதமர் மோடியை இன்று நேரில் சந்தித்து பேச முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றார்: விமான நிலையத்தில் பிரமாண்ட வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Delhi ,PM Modi ,CHENNAI ,Modi ,Tamil Nadu ,Delhi airport ,M.K.Stalin ,Dinakaran ,
× RELATED டெல்லி கணேஷ் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்