கோவா: கோவாவில் நடந்த அமைச்சர்கள் குழு கூட்டத்தில் ரெடிமேட் ஆடைகளுக்கான ஜிஎஸ்டியை 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. ஜிஎஸ்டி விகிதத்தில் மாற்றம் கொண்டு வருவது பற்றி, கோவாவில் அமைச்சர்கள் குழு கூட்டம் நடைபெற்றது. இதில், பயிற்சி நோட்டு, பென்சில்கள், ஆடைகளுக்கான ஜிஎஸ்டியில் மாற்றம் செய்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.இதில் பங்கேற்ற மேற்கு வங்க நிதியமைச்சர் சந்திரிமா பட்டாச்சார்யா, கூட்டத்துக்குப் பிறகு நிருபர்களிடம் கூறியதாவது: பென்சில், பயிற்சி நோட்டு போன்ற கல்வி சார்ந்த பொருட்கள் மீதான ஜிஎஸ்டியைக் குறைப்பது குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இவை தற்போது 12 சதவீத வரிப்பிரிவில் இடம் பெற்றுள்ளன. இதனை 5 சதவீத வரிப்பிரிவில் சேர்ப்பது குறித்து முடிவு செய்யப்பட்டது.
இதற்கு அனைவரும் ஏக மனதாக ஒப்புதல் அளித்துள்ளோம். இது, கல்விச் செலவுகள் குறைவதற்கு வழி வகுப்பதாக அமையும். மருத்துவக் காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு பிரிமியம் மீதான ஜிஎஸ்டியில் மாற்றம் செய்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது. ஆனால், எந்த முடிவும் எட்டப்படவில்லை. இது குறித்து அக்டோபர் 19ம் தேதி நடைபெற உள்ள அமைச்சர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. இதிலும் முடிவு எட்டப்படாத விஷயங்கள் குறித்து அக்டோபர் 20ம் தேதி விவாதம் நடத்தப்படும். மக்களுக்கு நன்மை அளிக்கும் முடிவுகளுக்கு ஏகமனதாக ஆதரவு அளித்தோம். மக்களை பாதிக்கும் வரி உயர்வு முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது மேலும், ஜிஎஸ்டி மாற்றங்களில் மாநில வரி வருவாய் பாதிக்காத வகையிலும் முடிவு எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இவ்வாறு சந்திரிமா பட்டாச்சார்யா கூறினார்.
இந்தக் கூட்டத்தில் ஜிஎஸ்டியில் உள்ள 85 சதவீத பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இவற்றில் ஒன்றாக, ₹1,000க்கு மேல் உள்ள ரெடிமேட் ஆடைகளுக்கு ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதற்கு கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. வரியை உயர்த்தினால் சாமானிய மக்களும், ஜவுளித்துறையும் கடுமையாக பாதிக்கப்படும் என கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக சந்திரிமா பட்டாச்சார்யா கூறினார். இதுபோல், சில ஜவுளிகள் மற்றும் ஆடைகள் மீதான 5 சதவீத ஜிஎஸ்டியை 12 சதவீதமாக உயர்த்தவும் கூட்டத்தில் திட்டமிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வரி உயர்த்த கூறப்படும் காரணம்
ஜிஎஸ்டி அமலுக்கு கொண்டு வரும்போது,ஆர்என்ஆர் எனப்படும் வரிக்கு பிறகு அரசுக்கு கிடைக்கும் சராசரி வருவாய் 15.5 சதவீதமாக இருந்தது. இது தற்போது 11 சதவீதமாகி விட்டது. ஜிஎஸ்டி அமலான பிறகு, மாநிலங்கள் தரப்பிலும், தொழில் துறையினர் தரப்பிலும் வைக்கப்பட்ட கோரிக்கைகளை தொடர்ந்து, பல பொருட்கள் மீதான வரிகள் குறைக்கப்பட்டன. இதனால்தான் ஜிஎஸ்டி வரிக்குப் பிந்தைய வருவாய் குறைந்து விட்டது. இதனை ஈடுகட்டவே தற்போது ஜவுளி, ஆடைகள் மீதான வரியை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால், தமிழகத்தில் திருப்பூர் போன்று ஆடை உற்பத்தியை நம்பியுள்ள ஏராளமான தொழிலாளர்கள், தொழில்துறையினர் பாதிக்கப்படுவார்கள் என்ற அச்சம் எழுந்துள்ளது. மேலும், சாமானிய மக்களின் நலனை விட வரி வசூலில்தான் ஒன்றிய அரசு கவனம் செலுத்துகிறது என்ற குற்றச்சாட்டை மெய்ப்பிக்கும் விதமாக இது அமைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
The post கோவாவில் நடந்த கூட்டத்தில் விவாதம்; ரெடிமேட் ஆடைக்கான ஜிஎஸ்டி உயர்கிறது: காப்பீடு பிரிமியம் மீதான வரிகுறைப்பு குறித்து முடிவு இல்லை appeared first on Dinakaran.