×
Saravana Stores

கடலூர் மாவட்டத்தில் 7 பேருக்கு டெங்கு காய்ச்சல்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் 7 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவ நிலை மாற்றம் காரணமாக தற்போது டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்திருந்தனர். அதில் தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 64 பேருக்கு ரத்த மாதிரிகள்
எடுத்து சோதனை செய்யப்பட்டது.

இதில், கடலூர் வெளிச்செம்மண்டலம் மற்றும் குறிஞ்சிப்பாடி, விழுப்புரம் மாவட்டம் வானூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 7 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதனால் அந்த 7 பேரும் கடலூர் அரசு மருத்துவமனையில் உள்ள டெங்கு காய்ச்சலுக்கான தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர்கள் 4 பேரும் நல்ல நிலையில் உள்ளனர். மேலும் அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்கள் செவிலியர்களும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மீதமுள்ள 57 பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அவர்களும் அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.தற்போது பருவநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். வீட்டின் தோட்டத்தில் உள்ள டயர்கள் மற்றும் தேங்காய் ஓடுகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இதே போல ஏசி மற்றும் குளிர்சாதன பெட்டியில் தண்ணீர் இருந்தால் அவற்றை உடனடியாக வெளியேற்ற வேண்டும். இவற்றில் தான் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும். எனவே பொதுமக்கள் இதில் விழிப்புடன் இருக்க வேண்டும். காய்ச்சிய குடிநீரையே பருக வேண்டும். இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி அதற்குரிய மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். சுயமாக மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். பரிசோதனையில் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க கடலூர் அரசு மருத்துவமனையில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது என்று கடலூர் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் அசோக் பாஸ்கர் கூறினார்.

The post கடலூர் மாவட்டத்தில் 7 பேருக்கு டெங்கு காய்ச்சல்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை appeared first on Dinakaran.

Tags : Cuddalore district ,Cuddalore ,Cuddalore Government Hospital ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED கடலூர் மாவட்டத்தில் 11 பேருக்கு டெங்கு