×

நடிகர் விக்ரம் ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்!

நன்றி குங்குமம் டாக்டர்

படத்துக்கு படம் வித்தியாசமான கதைக்களத்திலும் கதாபாத்திரங்களிலும் தோன்றி தனது தனித்துவ நடிப்பால் ரசகிகர்களை ஈர்த்து வைத்துள்ளவர் நடிகர் விக்ரம். 1990ஆம் ஆண்டிலேயே விக்ரம் திரையுலகிற்கு வந்துவிட்டாலும், சேது படம் வெளியான பின்புதான் ரசிகர் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். சில ஹீரோக்கள் ஒரு சில படங்களில்தான் வித்தியாசமான தோற்றத்தில் தோன்றி நடிப்பார்கள்.

ஆனால், விக்ரம் சாதாரணமாக தோன்றிய படங்களே ஒரு சிலதான் என்று சொல்லும் அளவிற்கு தனது ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் தோன்றி ரசிகர்களை ஆச்சரியப்பட வைப்பதில் வல்லவர் இவர். குறிப்பாக, சேது முதல் சமீபத்தில் வெளியான தங்கலான் வரை படத்துக்கு படம் திறமையான நடிப்பையும், அந்த நடிப்பிற்காக கடின உழைப்பையும் கொடுத்துள்ளார். குறிப்பாக, ஷங்கர் இயக்கத்தில் வெளியான ஐ படத்தில் ஒரு பாதியில் கட்டுமஸ்தான உடல் பொருந்திய இளைஞராகவும் இன்னொரு பாதியில் கூன் விழுந்த வயதான தோற்றமுடைய மனிதராகவும் தோன்றியிருப்பார். இவருக்கு தற்போது 57 வயது ஆகிறது. இத்தனை வயதாகியும் இன்னும் இளமையான தோற்றம் கொண்டுள்ள விக்ரமின் ஃபிட்னெஸ் ரகசியங்களை தெரிந்து கொள்வோம்.

ஒர்க்கவுட்ஸ்:

திரைப்படத்திற்கு என்று இல்லாமல் பொதுவாக உடலை கட்டுகோப்பாகவும், இளமையாகவும் வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான். அதுபோன்று என்னைச் சுற்றி இருப்பவர்களும் சரி, அல்லது யாராக இருந்தாலும், தங்களை ஃபிட்டாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். எனக்கு விவரம் தெரிந்த நாள் முதலே நான் உடற்பயிற்சி செய்வதை தொடங்கிவிட்டேன்.

தினமும் உடற்பயிற்சி செய்வதும், அதிக உடல் உழைப்பை மேற்கொள்வதும்தான் நான் இப்போதும் இளமையாக இருக்க காரணம். திரையுலகிற்கு வந்த பிறகு, எனது ஃபிட்னெஸ் டிரைனர்கள் என்ன கூறுகிறார்களோ அதன்படி பின்னபற்ற தொடங்கிவிட்டேன். அந்தவகையில், தினசரி கார்டியோ பயிற்சிகள், நீச்சல் பயிற்சி, சைக்ளிங், ஓட்டப்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளுவேன். அதுபோன்று படத்தின் கதையை இயக்குநர் கூறும்போதே அந்த கதாபாத்திரத்தின் உடல் அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானித்துவிடுவேன்.

அதன்பிறகு, எனது டிரைனர்கள் சொல்லும் பயிற்சிகளையும், டயட்களையும் பின்பற்றுவேன். உதாரணமாக, ஒரு படத்திற்காக, ப்ளையோமெட்ரிக் எனப்படும் உடற்பயிற்சியை மேற்கொண்டேன். இதில், அதிக தசைகளை கொண்டு பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இந்த வகையான உடற்பயிற்சியில், ஸ்கிப்பிங், ஸ்குவாட் ஜம்ப், ஃபர்பி உள்ளிட்ட பல வகையான பயிற்சிகள் அடங்கும்.

டயட்:
உடற்பயிற்சிகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறேனோ அதே அளவு டயட்டிலும் கவனமாக இருப்பேன். இவை இரண்டும்தான் உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள உதவுவதாக நான் நம்புகிறேன். எனவே, கடந்த 2020 முதல் பல்வேறு டயட் முறைகளை பின்பற்றி வருகிறேன். அதேசமயம், ஒரே டயட்டையும் தொடர்வதில்லை. ஏனென்றால் ஒரே மாதிரியான டயட்டை பின்பற்றினால் அது போர் அடித்துவிடும். மேலும், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அதை பின்பற்றுவதும் கடினமாக இருக்கும். எனவே, அவ்வப்போது எனது டயட் ஸ்டைலை மாற்றிக்கொண்டே இருப்பேன். உதாரணமாக, ஐ படத்திற்காக எடையை குறைக்க, ஃபைபர் டயட்டை மேற்கொண்டேன்.

அதாவது, பழவகைகள் மட்டுமே நிரம்பிய டயட்டை ஸ்ட்ரிட்டாக கடைப்பிடித்தேன். இந்த டயட்டை கடைபிடிக்கையில் முழுக்க முழுக்க பழங்களை மட்டுமே உட்கொண்டேன். வேறு உணவுகள் எதுவும் சாப்பிடவில்லை. இதற்காக பல்வேறு நாடுகளில் இருந்து ஃபைபர் நிறைந்த பல வெளிநாட்டுப் பழங்களையும் தேடித் தேடி வரவழைத்து சாப்பிட்டேன். அதுபோன்று, ப்ரோட்டீன் டயட், லோ கார்ப் டயட் போன்றவற்றையும் மேற்கொள்ளுவேன். ப்ரோட்டீன் டயட் என்பது, முட்டை, சிக்கன், நட்ஸ் வகைகள் மட்டுமே கொண்டே பிரத்யேக டயட்டாகும். இதில் வேறு எந்த சேர்க்கையும் இருக்காது.

லோ கார்ப் டயட் (Low Carb Diet) இது கார்போஹைட்ரேட் உணவுகளை மட்டுமே பிரதானமாக கொண்டிருக்கும். இதனால், உடலில் 80 முதல் 240 கலோரிகள் வரை மட்டுமே சேரும். உடல் எடையை குறைக்க முயற்சி செய்யும் பலரும் இந்த டயட்டை பின்பற்றுகின்றனர். அந்தவகையில், ப்ரோட்டீன் ஷேக்ஸ், கேக்ஸ், பேக் செய்யப்பட்ட குக்கீஸ், சியா விதைகள் மற்றும் குயினாவோ உள்ளிட்ட உணவுகளையும் சாப்பிடுகிறேன்.

இளம் தலைமுறையினருக்கு விக்ரம் அட்வைஸ்

இளம் தலைமுறையினர் அனைவரும் அவர்களது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும். இதற்காக இளம் பருவத்தில் இருந்தே தேவையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதுபோன்று ஆசையாக இருக்கிறது என்று கண்ட உணவுகளையும் சாப்பிட்டு உடலை கெடுத்துக் கொள்ளக்கூடாது. தேவையான ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். அப்போதுதான் வரும் காலமும் ஆரோக்கியமாக இருக்கும்.

தொகுப்பு: ஸ்ரீதேவிகுமரேசன்

The post நடிகர் விக்ரம் ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்! appeared first on Dinakaran.

Tags : Vikram ,Saffron ,Dinakaran ,
× RELATED நெல்லையில் ரூ.1260 கோடி முதலீடு செய்கிறது விக்ரம் சோலார்!