கான்பூர்: இந்தியா- வங்கதேசம் அணிகள் இடையே 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில் சென்னையில் நடந்த முதல் டெஸ்ட்டில் இந்தியா 280 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நிலையில் 2வது டெஸ்ட் உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. முதல் டெஸ்ட்டில் முதல் இன்னிங்சில் அஸ்வின் (113), 2வது இன்னிங்சில் ரிஷப்பன்ட் (109), சுப்மன் கில் (119) சதம் விளாசினர். கேப்டன் ரோகித்சர்மா, விராட் கோஹ்லி, கே.எல்.ராகுல் பெரிய ஸ்கோர் அடிக்காத நிலையில் இந்த டெஸ்ட்டில் அவர்கள் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
வேகப்பந்து வீச்சில் பும்ரா அணியின் முதுகெலும்பாக உள்ளார். எந்த ஆடுகளத்திலும் அவரால் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்து விக்கெட் எடுக்க முடியும். அவருடன் முகமது சிராஜ் இடத்தை தக்க வைத்துக்கொள்ளார். கான்பூர் ஆடுகளம் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் ஆகாஷ் தீப்பிற்கு பதிலாக குல்தீப் யாதவ் அல்லது அக்சர்பட்டேல் அணியில் சேர்க்கப்படலாம். மற்றபடி ஆடும் லெவனில் எந்த மாற்றமும் இருக்காது. இந்த போட்டியிலும் இந்தியா வென்று 2-0 என வங்கதேசத்தை ஒயிட் வாஷ் செய்து சாம்பியன்ஷிப் பைனலுக்கான வாய்ப்பை மேலும் வலுப்படுத்திக்கொள்ளும் முனைப்பில் களம் காண்கிறது.
மறுபுறம் வங்கதேச அணியில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய உற்சாகத்தில் களம் இறங்கினாலும் இந்திய பவுலிங்கிற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் முதல் டெஸ்ட்டில் தோல்வியை சந்தித்தது. அதில் இருந்து மீண்டும் கான்பூரில் சவால் அளிக்கும் முனைப்பில் உள்ளது.
பேட்டிங்கில் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ, முஷ்பிகுர் ரஹீம், லிட்டன் தாஸ் ஆகியோர் மீது எதிர்பார்ப்பு உள்ளது. அனுபவ வீரர் ஷகிப் அல்ஹசன் விரல் காயத்தில் இருந்து மீண்டுள்ளது நம்பிக்கை அளிக்கும். பவுலிங்கில் சென்னையில் தஸ்கின் அகமது, ஹசன் முகமது வேகத்தில் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அளித்தனர். சுழற்பந்துவீச்சு தான் எடுபடவில்லை.
இதனால் இந்த டெஸ்ட்டில் கூடுதல் ஸ்பின்னருடன் வங்கதேசம் களம் இறங்கும். இந்தியாவுக்கு எதிராக முதன் முறையாக டெஸ்ட்டில் வெல்ல வங்கதேசம் போராடும். இதுவரை இரு அணிகளும் 14 டெஸ்ட்டில் மோதி உள்ளன. இதில் 12ல் இந்தியா வென்றுள்ளது. 2 போட்டி டிராவில் முடிந்துள்ளது.
கான்பூரில் இதுவரை…
* கான்பூர் கிரீன்பார்க் மைதானத்தில் 1952ம் ஆண்டில் முதல் டெஸ்ட் நடந்தது. இதுவரை 23 டெஸ்ட் போட்டி நடந்துள்ளது. இதில் இந்தியா 7ல் வென்றுள்ளது. 3 தோல்வி அடைந்துள்ளது. 13 போட்டி டிராவில் முடிந்திருக்கிறது. கடைசியாக 2021ல் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் டிராவில் முடிந்தது. 3 ஆண்டுக்கு பின் இங்கு டெஸ்ட் நடைபெற உள்ளது. முதன்முறையாக வங்கதேசம் இங்கு டெஸ்ட்டில் ஆட உள்ளது.
* இலங்கைக்கு எதிராக 1986ம் ஆண்டு நடந்த டெஸ்ட்டில் இந்தியா 676/7 ரன் குவித்ததுதான் அதிகபட்சமாகும். ஆஸ்திரேலியா 1959ல் 105 ரன்னில் சுருண்டதுதான் குறைந்த ரன். இந்தியாவின் குறைந்தபட்ச ரன் 121.
* இங்கு குண்டப்பா விஸ்வநாத் 7 டெஸ்ட்டில் 3 சதத்துடன் 776 அடித்து டாப்பில் உள்ளார். பவுலிங்கில் கபில்தேவ் 7 டெஸ்ட்டில் 25 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார்.
மழை மிரட்டல்?
கான்பூரில் அடுத்த 3 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. 4 மற்றும் 5வது நாளில் மழைக்கு வாய்ப்பு இல்லை. 5 நாட்களும் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். கான்பூர் ஆடுகளம் களிமண்ணால் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு பந்து மெதுவாகவும் தாழ்வாகவும் செல்லும். பேட்ஸ்மேன்களுக்கு முதல் இரண்டு நாட்கள் சாதகமாக இருக்கும். கடைசி 3 நாட்கள் முழுக்க சுழல் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள்.
300 விக்கெட் மைல் கல்லை எட்டும் ஜடேஜா
* இந்திய ஆல்ரவுண்டர் ஜடேஜா 300 டெஸ்ட் விக்கெட் மைல் கல்லை எட்ட இன்னும் ஒரு விக்கெட் தான் தேவை. அவர் ஒரு விக்கெட் எடுத்தால் டெஸ்ட்டில் 300 விக்கெட் மற்றும் 3000 ரன் எட்டிய 3வது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை படைப்பார். இதற்கு முன் கபில்தேவ், அஸ்வின் இந்த மைல் கல்லை எட்டி உள்ளனர். மேலும் சர்வதேச அளவில் 11வது வீரர் என்ற சிறப்பை ஜடேஜா பெறுவார்.
* விராட் கோஹ்லி 129 ரன் எடுத்தால் டெஸ்ட்டில் 9 ஆயிரம் ரன்னை தொடுவார். மேலும் 35 ரன் எடுத்தால் சர்வதேச கிரிக்கெட்டில் வேகமாக 27 ஆயிரம் ரன் அடித்த வீரர் என்ற சாதனையை படைக்கலாம்.
* 2013ம் ஆண்டு முதல், இந்தியா தொடர்ச்சியாக 17 உள்நாட்டு டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளது, கான்பூரில் வெற்றி அல்லது டிரா, செய்தால் 18வது தொடர் வெற்றியை உறுதி செய்யும்.
The post வங்கதேச அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் கான்பூரில் நாளை தொடக்கம்: வெற்றியை தொடர இந்தியா ஆயத்தம் appeared first on Dinakaran.