டெல்லி: மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில் இந்தியாவின் உற்பத்திதுறை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வேற்று விளம்பரங்களால் தோல்வியை மறைக்க முடியாது என்றும் விமர்சித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் தொழில்துறை சந்தித்துள்ள பெரும் சரிவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பட்டியலிட்டுள்ளார். இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தலத்தில் பதிவிட்டுள்ள கார்கே 10 ஆண்டுகளுக்கு முன்னர் பிரதமர் மோடி மேக் இன் இந்தியா மற்றும் தற்சார்பு இந்தியா வழக்கத்தை முன்வைத்ததை குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் மோடி அரசின் தவறான கொள்கைகளால் இந்தியாவின் உற்பத்தித்துறை சீரழிந்து விட்டதாக கார்கே சாடியுள்ளார். இது தொடர்பாக அப்பட்டமான 5 உண்மைகள் என தொழில் துறையில் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆட்சி காலங்களில் ஏற்பட்ட மாற்றங்களை பட்டியலிட்டுள்ளார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் உற்பத்தி துரையின் சராசரி வளர்ச்சி விகிதம் 7.85 விழுக்காடாக இருந்தது. ஆனால் மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில் அந்த வளர்ச்சி விகிதம் 3.1 சதவீதமாக குறைந்துவிட்டதாக அவர் கூறியுள்ளார்.
காங்கிரஸ் ஆட்சியில் தொழிற்சாலைகளில் பணியாளர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 6.2 விழுக்காடு வளர்ச்சி அடைந்தது. ஆனால் பாஜக ஆட்சியில் அந்த எண்ணிக்கை 2.8 சதவீதமாக சரிந்துள்ளது. பாஜக ஆட்சியில் ஜி.டி.பியில் உற்பத்தி துறையின் பங்களிப்பு கடும் சரிவை கண்டுள்ளதாக கார்கே விமர்சித்துள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவின் ஜி.டி.பியில் 15.25 விழுக்காடாக இருந்த உற்பத்தி துறையின் பங்களிப்பு பாஜக ஆட்சியில் 11.6 சதவீதமாக சரிந்துள்ளது. சோலார் உற்பத்தி, பேட்டரிகள் தயாரிப்பு, ஜவுளித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நிர்ணயிக்கப்பட்ட உற்பத்தி இலக்கை எட்ட முடியவில்லை என்றும் மோடி அரசின் மோசமான கொள்கைகளே இதற்கு காரணம் என்றும் நிபுணர்கள் விமர்சிப்பதாக கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.
லாபம் ஈட்டித்தரும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் மோடியின் பணக்கார நண்பர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக சாடியுள்ள கார்கே. அரசு பணிகளில் காலி பணியிடங்களை நிரப்பாமல் 5.1 லட்சம் பணியிடங்களை நீக்கியுள்ளதாக குற்றம்சாட்டி இருக்கிறார். எஸ்.சி.எஸ்.டி, ஓ.பி.சி பிரிவினருக்கான 1.3 லட்சம் பணியிடங்கள் மோடி ஆட்சியில் குறைக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் ஆட்சியில் தொழிற்சாலைகளில் 5 சதவீதம் மட்டுமே ஒப்பந்தம் ஊழியர்களாக பணியாற்றினர். ஆனால் பாஜக ஆட்சியில் ஒப்பந்த ஊழியர்களின் எண்ணிக்கை 40 விழுக்காடாக அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள கார்கே மேக் இன் இந்தியா விளம்பரத்தால் தொழில்துறை சீரழிவை மறைத்து விட முடியாது என்றும் கூறியுள்ளார்.
The post பாஜக ஆட்சியில் உற்பத்தி துறையின் பங்களிப்பு கடும் சரிவு; வெற்று விளம்பரங்களால் தோல்வியை மறைக்க முடியாது: கார்கே appeared first on Dinakaran.