மாஸ்கோ : ரஷ்யாவின் உள் மண்டலங்கள் மீது நீண்ட தூரம் சென்று தாக்கும் குரூஸ் ஏவுகணைகளை உக்ரைன் வீசினால் அணுகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தும் முடிவை ரஷ்யா பரிசீலிக்கும் என்று அந்நாட்டு அதிபர் புதின் எச்சரித்துள்ளார். 2.5 ஆண்டுகளுக்கு மேலாக ரஷ்யா -உக்ரைன் இடையே போர் நீடித்து வரும் சூழலில், ரஷ்யாவின் உள் நகரங்கள் மீது தாக்குதல் நடத்த உக்ரைன் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நேட்டோ கூட்டமைப்பில் சேர முயன்ற உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்காவை ஐரோப்பிய நாடுகளும் உக்ரைனை ஆதரித்து வருகின்றன.
இந்த சூழலில் தங்கள் நாட்டு தயாரிப்பான குரூஸ் ஏவுகணைகளை ரஷ்யா மீது வீசுவதற்கு உக்ரைனுக்கு இங்கிலாந்து அனுமதி அளிக்க தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சக்தி வாய்ந்த ஏவுகணைகளை பயன்படுத்துவதற்கு அனுமதி அளிப்பது தொடர்பாக 2 வாரங்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் ஜோ பிடனுடன் வாஷிங்டனில் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஆலோசனை நடத்தினார் என்பது ரஷ்யாவின் குற்றச்சாட்டு. இந்த சூழலில் தனது பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்திய ரஷ்ய அதிபர் புதின், தங்கள் நாட்டு அணு கொள்கையில் மாற்றம் செய்வதாக அதிரடியாக தெரிவித்துள்ளார். உள் நகரங்கள் மீது குரூஸ் ஏவுகணைகள், போர் விமானங்கள் மற்றும் டிரோன் தாக்குதல் நடத்த உக்ரைன் தயாராகிறது என்ற உறுதியான தகவல்கள் கிடைத்தால் அணு குண்டு வீசுவதை ரஷ்ய பரிசளிக்கும் என்று புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
The post “ரஷ்ய நகரங்கள் மீது ஏவுகணையை ஏவினால் அணுகுண்டுகளை வீசுவோம்”: உக்ரைனுக்கு அதிபர் புதின் பகிரங்க எச்சரிக்கை appeared first on Dinakaran.