×

கும்பகோணத்தில் கலைஞர் கோட்டம் திறப்பு விழா: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

கும்பகோணம், செப்.26: கும்பகோணத்தில் கலைஞர் கோட்டம் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். கும்பகோணம் அருகே வலையபேட்டை மாங்குடி கிராம முகப்பில் நூலகத்துடன் கூடிய முத்தமிழறிஞர் கலைஞர் கோட்டத்தையும், அதில் நிறுவப்பட்டுள்ள கலைஞர் திரு உருவ சிலையையும் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை 9 மணியளவில் திறந்து வைக்கிறார். தொடர்ந்து கும்பகோணம் மாநகராட்சி மூர்த்தி கலையரங்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பொன்விழாவை சிறப்பிக்கும் வகையில் டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.

இதில் அமைச்சர் பெருமக்கள், மாவட்ட ஆட்சியர், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். முன்னதாக, நேற்று இரவு கும்பகோணம் வருகை தந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு திருவலஞ்சுழி புதிய புறவழிச்சாலையில் கும்பகோணம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் செயலாளர் முத்துச்செல்வம் தலைமையில் பூரண கும்ப மரியாதையுடன், ஏலக்காய் மாலை அணிவித்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அணி திரள உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன், மாநிலங்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம், அரசு தலைமை கொறடா கோவி.செழியன், எம்எல்ஏக்கள் சாக்கோட்டை அன்பழகன், டிகேஜி நீலமேகம், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், கும்பகோணம் மாநகர திமுக செயலாளர் சு.ப.தமிழழகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சி குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, விக்கிரவாண்டி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் கும்பகோணம் வட்டம், வலையப்பேட்டை மாங்குடி கிராம முகப்பில், கழக மாநிலங்களவை உறுப்பினர், தஞ்சாவூர் வடக்கு மாவட்டக் கழக செயலாளர் எஸ்.கல்யாணசுந்தரம் சீரிய முயற்சியின் விளைவாக கட்டப்பட்டுள்ள நூலகத்துடன் கூடிய முத்தமிழறிஞர் கலைஞர் கோட்டம் கட்டடத்தையும், அதில் நிறுவப்பட்டுள்ள, அமைச்சர் எ.வ.வேலு வழங்கியுள்ள முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவ சிலையையும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்திடும் இனிய விழா இன்று (26ம் தேதி) நடைபெறுவது அறிந்து நெஞ்சம் மகிழ்கிறேன்.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் வழியில் முத்தமிழறிஞர் கலைஞர் தம் வாழ்நாளெல்லாம் கடுமையாக உழைத்து, தமிழர் வாழ்வில் வளமும், வலிமையும் சேர்க்கும் திட்டங்கள் பலவற்றை செயல்படுத்தி கல்வி, அறிவியல், தொழிற்நுட்பம், அரசியல், பொருளாதார, சமுதாய நிலைகள் அனைத்திலும் தலைசிறந்த மாநிலம் தமிழ்நாடு எனும் பெருமையை நமக்கு தேடித் தந்தார். உலகெங்கும் வாழும் தமிழர்களின் காவல் அரணாக தலைவர் கலைஞர் விளங்கினார். அவர் எழுப்பிய ஜனநாயக, சமூகநீதி, சமத்துவ சிந்தனைகளே இன்று இந்திய நாடெங்கும் எதிரொலிக்கின்றன. முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி நான் மாவட்ட கழக செயலாளர்களுக்கு வழங்கிய அறிவுரைகளுக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவ சிலையையும், திராவிட முன்னேற்ற கழகத்தின் கிளையை முதன் முதல் உருவாக்கி, படிப்பகமும் கட்டி கழகம் வளர்த்த மூத்த முன்னோடி,

நினைவில் வாழும் மொழிப்போர் தியாகி வீ.இரத்தினம், முத்தமிழறிஞர் கலைஞரின் சிறப்பு உதவியாளராக திகழ்ந்த புலவர் முத்து.வாவாசி தம்முடைய மாங்குடி கிராமத்தில் நிறுவியுள்ள சிலை ஆகியவற்றை திறந்து வைத்திடும் விழாக்கள் சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் நிகழ உளமார வாழ்த்துகிறேன். கழகமே உயிர் மூச்சென வாழ்ந்த வீ.இரத்தினம் போன்ற கழகத்தின் அடிப்படை தொண்டருக்கும் சிலை அமைத்து மரியாதை செலுத்தப்படுவது எந்தவித எதிர்பார்ப்புமின்றி, கழகத்தின் வளர்ச்சிக்காக உழைத்து வரும் தொண்டர்களுக்கு உற்சாகமும், ஊக்கமும் அளிக்கும் பணியாகும்.

இப்பணியை முன்னெடுத்துள்ள தஞ்சாவூர் வடக்கு மாவட்டக் கழக செயலாளர், மாநிலங்களவை உறுப்பினர் அன்பிற்கினிய திரு. எஸ்.கல்யாணசுந்தரம், மொழிப்போர் தியாகி பெரியவர் வீ.இரத்தினம் சிலை எடுத்து சிறப்பித்துள்ள புலவர் முத்து.வாவாசி அவர்களுக்கும், இந்த மகத்தான விழா வெற்றிபெற துணைநின்ற கழக அமைப்புகளின் நிர்வாகிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி தெரிவித்துள்ளார்.

The post கும்பகோணத்தில் கலைஞர் கோட்டம் திறப்பு விழா: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்கிறார் appeared first on Dinakaran.

Tags : Kotham ,Kumbakonam ,Minister ,Udhayanidhi Stalin ,Kalayan Kottam ,Udayanidhi Stalin ,Chief Minister ,M.K.Stalin ,Muthamizharinagar ,Artist Kotham ,Valayapet Mangudi village ,Dinakaran ,
× RELATED கும்பகோணத்தில் பயங்கரம் மனைவி கழுத்தை நெரித்து கொன்ற கொடூர கணவர்