திருவாடானை, செப்.26: திருவாடானை தெற்கு நடுத்தெருவில் உள்ள பிரசித்தி பெற்ற மழை முத்துமாரியம்மன் கோயில் உற்சவ திருவிழா கடந்த செப்.17ம் தேதி காப்புக் கட்டுதலுடன் துவங்கியது. அதன்படி கடந்த 7 நாட்களாக ஒவ்வொரு நாளும் இரவு முத்துமாரியம்மன் கோயிலில் கும்மி கொட்டுதல் நிகழ்ச்சியுடன் அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து எட்டாம் நாள் திருவிழாவான நேற்று முன்தினம் ஆதிரெத்தினேஸ்வரர் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு பக்தர்கள் கரகம் எடுத்தலுடன் ஏராளமான பெண்கள் தலையில் பால்குடம் சுமந்து வந்துனர்.
நான்கு முக்கிய வீதிகளின் வழியாக சென்று முத்துமாரியம்மன் கோயிலுக்கு வந்தடைந்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். அதன்பிறகு இளைஞர் மன்றம் சார்பில் ஏராளமான பெண்கள் மழை வேண்டி அம்மன் சன்னதி முன்பு 101 பானையில் பொங்கல் வைத்து வழிபட்டனர். தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த கோயில் மூலவரான மழை முத்துமாரியம்மனை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
The post மழை வேண்டி பொங்கல் வைத்த பக்தர்கள் appeared first on Dinakaran.