மதுரை: நாடு முழுவதும் பள்ளி அருகே குட்கா, கூல் லிப் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் விற்பதை தடை செய்து கடும் சட்டத்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. ஐகோர்ட் மதுரை கிளையில் புகையிலை பறிமுதல் வழக்கில் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி, ‘‘தமிழ்நாட்டில் கூல் லிப் எனும் போதைப்பொருளை விற்பனை செய்த வழக்கில் ஜாமீன் கோரி பல மனுக்கள் தாக்கலாகின்றன. பள்ளி மாணவர்கள் இதற்கு அடிமையாகியுள்ளது தெரிய வருகிறது. இவற்றை இந்தியா முழுவதும் ஏன் தடை செய்யக்கூடாது? இந்த வழக்கில், அரியானா மாநிலம் சோனேபேட், கர்நாடக மாநிலம் தும்கூர் மற்றும் அந்தரசனஹள்ளி ஆகிய இடங்களில் செயல்படும் தனியார் நிறுவனங்களை ஒரு எதிர்மனுதாரர்களாக சேர்த்து பதிலளிக்கவேண்டும்’’ என உத்தரவிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. கூடுதல் அட்வகேட் ெஜனரல் வீராகதிரவன், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் அன்புநிதி ஆஜராகி, ‘‘முன்பு ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பயப்பட்டனர். ஆசிரியர்களும் கண்டிப்புடன் இருந்தனர். தற்போது ஆசிரியர்கள் கண்டித்தாலே, மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். பெற்றோரும், மாணவர்களை கடுமையாக கண்டிக்கக் கூடாது என்கின்றனர். கண்டிப்புடன் நடந்து கொள்ளும் ஆசிரியர்கள் பல பிரச்னைகள் மற்றும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். எனவே ஆசிரியர்கள், பெற்றோர் இணைந்து மாணவர்களை நல்வழிப்படுத்த ஆலோசனை வழங்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு சார்பில் பள்ளி அருகே புகையிலை பொருட்கள் விற்கக் கூடாது என சட்டங்களை இயற்றி கடுமையாக கண்காணித்து வருகிறோம். புகையிலை பொருட்கள் தடை குறித்த ஒன்றிய அரசின் சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வந்து, முதல் கட்டமாக பள்ளி வளாகங்கள் அருகே புகையிலை பொருட்கள் விற்பதை நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும்’’ என்றனர். ஒன்றிய அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராகி வாதிடுவதற்காக கால அவகாசம் வேண்டுமென கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதி, ‘‘முதலில் நாடு முழுவதும் பள்ளி மாணவர்கள் புகையிலை பொருட்களுக்கு அடிமையாகாமல் இருக்கத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்கு முதல் கட்டமாக பள்ளி வளாகங்கள் அருகே புகையிலை பொருட்கள் விற்பதை நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும். அடுத்ததாக நாடு முழுவதும் குட்கா, கூல் லிப் உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனையை தடை செய்ய ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குட்கா, கூல் லிப் உள்ளிட்ட புகையிலை தயாரிப்பு நிறுவனங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக ஒன்றிய அரசின் சட்டத்தில் கடுமையான திருத்தங்கள் மேற்கொள்வது குறித்து ஒன்றிய சுகாதாரத் துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.
The post நாடு முழுவதும் பள்ளிகள் அருகே குட்கா, கூல் லிப் விற்க தடை: ஒன்றிய அரசு கடும் சட்டத்திருத்தம் மேற்கொள்ள வேண்டும்; உயர் நீதிமன்ற கிளை அதிரடி appeared first on Dinakaran.