×
Saravana Stores

இஸ்ரேலில் தயாராகும் ஆயுதங்களுக்கு அதானி லேபிள்: ராகுல் காந்தி பகீர் குற்றச்சாட்டு

ஜம்மு: இஸ்ரேலில் தயாராகும் ஆயுதங்களுக்கு அதானி லேபிள் ஒட்டப்பட்டு இந்திய ராணுவத்துக்கு சப்ளை செய்யப்படுவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். ஜம்மு காஷ்மீரில் 50 பேரவை தொகுதிகளுக்கு ஏற்கனவே 2 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்த நிலையில், மீதமுள்ள 40 பேரவை தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 1ம் தேதி கடைசிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் சோப்பூரில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.

அப்போது பேசிய ராகுல் காந்தி, “மேக் இன் இந்தியா மற்றும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை இந்திய ராணுவம் பயன்படுத்தி வருவதாக பாஜ பேசுகிறது. ஆனால் உண்மை என்னவென்றால், இஸ்ரேலிய நிறுவனங்கள் ஆயுதங்களையும், ஆளில்லா விமானங்களையும் தயாரிக்கிறது. அதற்கு அதானியின் லேபிள் ஒட்டப்படுகிறது. அவை அனைத்தும் அதானியால் தயாரிக்கப்பட்ட இஸ்ரேலிய ஆயுதங்கள். அவை எப்படி இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என சொல்ல முடியும். விமான நிலையங்கள், துறைமுகங்கள், பாதுகாப்புத்துறை ஆயுதங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர், இமாச்சலபிரதேசத்தில் உற்பத்தி செய்யப்படும் ஆப்பிள்கள் கூட அதானியின் கட்டுப்பாட்டில் உள்ளது. விமான நிலையங்களுக்கு அதானி வரியும், மொபைல் போன்களுக்கு அம்பானி வரியும் விதிக்கப்படுகிறது. நீங்கள் சாலையில் செல்ல வேண்டுமென்றால் அதற்கான வரி அதானிக்கு செல்கிறது.

தானிய உற்பத்திக்கான வரி, ராணுவ ஆயுதங்கள், தோட்டாக்கள் மீதான வரிகளும் அதானிக்கு போகிறது. ஒரு விமான நிலையத்தை வேறு யாரேனும் நடத்தினால், அவர்கள் அந்த வசதியை அதானியிடம் ஒப்படைக்கும்படி சிபிஐ, அமலாக்கத்துறையால் மிரட்டப்படுகின்றனர். அதானி, அம்பானி போன்ற 25 தொழிலதிபர்களின் ரூ.16 லட்சம் கோடி கடனை ரத்து செய்த பாஜ அரசு, விவசாயிகள், மாணவர்கள், அதிக செலவு செய்த நோயாளிகளின் வங்கி கடனை ரத்து செய்ய மறுக்கிறது. பாஜ ஆட்சியில் அதானி, அம்பானிக்கு மட்டுமே இடம் உள்ளது. ஜிஎஸ்டியும், பணமதிப்பிழப்பும் அதானி, அம்பானியை மேலும் வளப்படுத்தவே கொண்டு வரப்பட்டன. ஆனால் இவை எல்லாம் இன்னும் எவ்வளவு நாள் நீடிக்கும்?” என்று புள்ளிவிவரங்களுடன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

The post இஸ்ரேலில் தயாராகும் ஆயுதங்களுக்கு அதானி லேபிள்: ராகுல் காந்தி பகீர் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Adani ,Israel ,Rahul Gandhi ,Bagheer Jammu ,Indian Army ,Jammu and ,Kashmir ,
× RELATED அதானி, காமராஜர் துறைமுகங்களில் 2வது...