திருவனந்தபுரம்: நடிகை பலாத்கார வழக்கில் நடிகர் முகேஷை தொடர்ந்து இடைவேளை பாபுவை நேற்று போலீசார் கைது செய்தனர். சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி பலாத்காரம் செய்ததாக ஒரு நடிகை அளித்த புகாரின் பேரில் பிரபல மலையாள நடிகரும், சிபிஎம் எம்எல்ஏவுமான முகேஷை சிறப்பு விசாரணைக் குழு நேற்று முன்தினம் கைது செய்தது. இந்த வழக்கில் ஏற்கனவே முகேஷுக்கு எர்ணாகுளம் நீதிமன்றம் முன்ஜாமீன் அளித்திருந்ததால் விசாரணைக்குப் பின்னர் அவரை போலீசார் விடுவித்தனர்.
இதே நடிகை, நடிக்க வாய்ப்பு தருவதாகவும், மலையாள நடிகர் சங்கத்தில் உறுப்பினர் ஆக்குவதாக கூறி தன்னை பலாத்காரம் செய்ததாக நடிகர் இடைவேளை பாபு மீதும் புகார் கூறியிருந்தார். இதுதொடர்பாக அவர் மீது எர்ணாகுளம் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் இவருக்கும் எர்ணாகுளம் நீதிமன்றம் முன்ஜாமீன் அளித்திருந்தது. இந்நிலையில் நடிகர் இடைவேளை பாபுவிடம் நேற்று கொச்சியில் சிறப்பு விசாரணைக் குழு சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தியது. இதன் பிறகு அவர் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்காக இடைவேளை பாபுவை போலீசார் எர்ணாகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எர்ணாகுளம் நீதிமன்றம் ஏற்கனவே இடைவேளை பாபுவுக்கு முன்ஜாமீன் அளித்திருப்பதால் விசாரணைக்குப் பின்னர் அவரை போலீசார் ஜாமீனில் விடுவித்தனர். இதற்கிடையே கேரள உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் மனுவை நிராகரித்த நிலையில் தலைமறைவாக உள்ள நடிகர் சித்திக் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளார். இதனிடையே சித்திக் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.
The post நடிகை பலாத்கார வழக்கு பிரபல நடிகர் இடைவேளை பாபு கைது: மலையாள திரை உலகில் பரபரப்பு appeared first on Dinakaran.