×
Saravana Stores

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமான பணிகளால் தாமதம்; சவாலாக உருவெடுத்துள்ள மழைநீர் வடிகால் சீரமைப்பு பணிகள்: பருவமழை தொடங்கும் முன்பே முடிக்க “மாநகராட்சி விறுவிறு”

மழை சீசன் தொடங்கினாலே எங்குச் சாலைகளில் மழை நீர் தேங்குமோ.. வீடுகளில் மழை நீர் புகுந்துவிடுமோ என்ற அச்சம் சென்னைவாசிகளுக்கு வந்துவிடும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக திமுக ஆட்சி பொறுப்பேற்றத்தில் இருந்து இந்த நிலைமை மாறத் தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு மிக்ஜாம் புயலைத் தவிர்த்துப் பார்த்தால் மழைக் காலங்களில் பெரியளவில் மழை நீர் எங்கும் தேங்குவது இல்லை. புதிய மழைநீர் வடிகால்களை அமைப்பது, ஏற்கனவே உள்ள மழைநீர் வடிகால்களைச் சீர் செய்வது எனச் சென்னை மாநகராட்சி எடுத்து வரும் முக்கிய நடவடிக்கைகளே இதற்குக் காரணமாக பேசப்பட்டு வருகிறது.

அதாவது, கடந்த 2021ம் ஆண்டு பருவமழையின் போது, சென்னை நகரில் மழைநீர் தேங்கியதால் பல பகுதிகள் பாதிக்கப்பட்டன. அதன்பின், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், உலக வங்கி நிதி மூலம் ரூ120 கோடி மதிப்பீட்டில், 48 கிமீ நீளத்திற்கும், உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியில் 10 கிமீ நீளத்திற்கு ரூ26 கோடி மதிப்பீட்டிலும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இதேபோன்று, கொசஸ்தலை ஆறு வடிநிலப் பகுதியில் ரூ 3220 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 80 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை முடிந்து, விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது.

பொதுவாகவே இந்த பருவமழை காலத்தில் தான் அதிக மழைப் பொழிவு இருக்கும். அக்டோபர் மாதத்தில் தொடங்கும் வடகிழக்கு பருவமழையின்போது கிடைக்கும் மழைநீர்தான் சென்னை மக்களின் தாகத்தை போக்கும் என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொரு ஆண்டும் இருக்கிறது. ஏனென்றால் இந்த பருவமழை காலத்தில் தான் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகள் அனைத்தும் நிரம்புவதற்கான வாய்ப்பு இருக்கும். கடந்த சில ஆண்டுகளாக, தொடர்ந்து வடகிழக்கு பருவமழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நல்ல மழை பொழிவு இருந்தது. அதை கருத்தில் கொண்டுதான் சென்னையில் மழை வெள்ள பாதிப்பை தடுக்க கட்டமைப்பு வசதிகளை தமிழ்நாடு அரசும், சென்னை மாநகராட்சியும் தீவிரப்படுத்தியுள்ளது.

“ஒரு மழைக்கே தாங்காது சென்னை” என்பதை மாற்றி காட்டும் நடவடிக்கையில், சென்னையில் எவ்வளவு மழை பெய்தாலும் அவை உடனடியாக வடியும் வகையில் மழை நீர் வடிகால்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. சென்னை மாநகர் பகுதியில் முடிக்கப்பட்ட மழைநீர் வடிகால்வாய்கள் மூலம் தற்போது பெய்து வரும் மழைநீர் வேகமாக வடிந்து வருகிறது. ஆண்டாண்டு காலமாக மழைநீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வந்த சென்னை மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்த இந்த அதிரடி நடவடிக்கை நல்ல வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது. இதேபோன்று சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
சென்னையின் பிரதான பகுதிகளில் 90 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களில் மழைநீர் வடிகால் பணி நிறைவடைந்துள்ளது. அதேநேரம், சென்னையின் புறநகர் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மேலும் சென்னை நகர் பகுதிகளில் கடந்த ஆண்டு தண்ணீர் தேங்கிய இடங்களை கண்டறிந்து, அந்த இடங்களில் மீண்டும் தண்ணீர் தேங்காதவாறு கணக்கீடு செய்யப்பட்டு மழைநீர் வடிகால்கள் பணி நடைபெற்று வருகிறது. ஆனாலும் குறிப்பிட்ட சில இடங்களில் மெட்ரோ ரயில் பணிகளில் இந்த மழைநீர் வடிகால்களை இணைக்கும் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. எனவே மெட்ரோ ரயில் பணிகளுக்காக தோண்டப்பட்ட ராட்சத பள்ளங்கள், குண்டும் குழியுமான சாலைகள் போன்றவற்றால் மழைநீர் வடிகால்களை இணைக்க முடியாத நிலை உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உதாரணமாக மாதவரம் பால் காலனியில் விடுபட்ட மழைநீர் வடிகால் சுமார் 200 மீட்டர் இருந்துள்ளது. இருப்பினும், அதை மேற்கொள்ள சிஎம்ஆர்எல் (மெட்ரோ ரயில் நிர்வாகம்) அனுமதி வழங்காத நிலையில், அந்த 200 மீட்டர் மழைநீர் வடிகால் பணிகள் நிலுவையில் இருக்கிறது.

மெட்ரோ கட்டுமானம் காரணமாக ஜவஹர்லால் நேரு சாலையில் 200 அடிக்கு நெடுஞ்சாலை வடிகால் இடிக்கப்பட்டுள்ளது. அதுவும் மழைக் காலம் தொடங்கும் முன்பு இந்த பாதையைப் புனரமைக்க வேண்டும். ஆற்காடு ரோடு எஸ்டபிள்யூடி பகுதியிலும் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.அதேபோன்று கீழ்ப்பாக்கத்தில் உள்ள மில்லர்ஸ் சாலை, புரசைவாக்கம் ஹைரோடு, பர்னபி ரோடு போன்ற பகுதிகளிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சமீபத்தில் இந்த பகுதிகளில் மழை பெய்தபோது தண்ணீரை அகற்ற மோட்டர்கள் பயன்படுத்தப்பட்டன. இருப்பினும், அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழையின் போது எதிர்பார்க்காத அளவுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது.

இவ்வாறு மெட்ரோ ரயில் பணிகள் உள்ளிட்ட சில பிரச்னைகளால் சென்னையின் நகர் பகுதிகளில் இணைக்கப்படாத மழைநீர் வடிகால் பணிகளை வட கிழக்கு பருவமழை நெருங்குவதற்குள் முடிக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வந்தாலும், இந்த இணைப்பு பணிகள் சவாலாக இருப்பதாக கூறப்படுகிறது. மெட்ரோ ரயில் பணிக்காக தோண்டப்பட்ட ராட்சி பள்ளங்கள் இடைமறிப்பதால் எவ்வாறு மழைநீர் வடிகால்களை கொண்டு செல்வது என்பது குறித்தும், அதற்கு மாற்று வழிகள் குறித்தும் பொறியாளர்கள் ஆலோசனை நடத்தி இப்பணிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

7 மண்டலங்களில் பணிகள் தாமதம் ஏன்?
சென்னையில் மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் 7 மண்டலங்களில் மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக மழைநீர் வடிகால்கள் பணிகள் தாமதமாகியுள்ளன. முன்னதாக கடந்த ஜூன் மாதம் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மெட்ரோ அதிகாரிகள் இடையே கட்டுமானம் தொடர்பாக ஆலோசனை நடந்தது. அதில் மாதவரம், திரு.வி.க.நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களின் சில பகுதிகளில் மெட்ரோ கட்டுமானம் காரணமாக மழைநீர் வடிகால் பணியை மேற்கொள்வதில் தாமதம் ஏற்படுவதாக மாநகராட்சி அதிகாரிகள் கவலை தெரிவித்தனர்.

எதையும் எதிர்கொள்ள தயார்
சீரமைப்பு பணிகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சென்னை மாநகராட்சியுடன் மற்ற துறைகளும் இணைந்து பணியாற்றி வருகின்றன. மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மெட்ரோ ரயில் பணிகள், ரயில்வே பணிகள் நடைபெற்று வருவதால் சில இடங்களில் மழைநீர் வடிகால் கால்வாய்கள் பணி செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. இந்த பணிகள் சவாலானதாக உள்ளது. எந்த வழியாக மழைநீர் வடிகால்களை கொண்டு சென்று இணைப்பது என்பது சம்பந்தப்பட்ட துறைகளுடன் இணைந்து தான் முடிவெடுத்து வருகிறோம். அதன் அடிப்படையில் தான் பணிகளை நடத்த வேண்டியுள்ளது. இணைப்பு இல்லாத பகுதிகளில் மழைநீர் வடிகால்கள் இருந்தாலும் நீரை வெளியேற்றுவது இயலாத காரியம். அதனால்தான் இணைப்பு பணிகளை வேகப்படுத்தி வருகிறோம். எப்படிப்பட்ட சவால்கள் இருந்தாலும் அந்த பகுதிகளில் மழைநீர் வடிகால்களை இணைப்பதை உறுதி செய்து வருகிறோம். எனவே, அதிக அளவு மழை பெய்தாலும், புயல் ஏற்பட்டாலும் அது எதிர்கொள்வதற்கு சென்னை மாநகராட்சி தயார் நிலையில் உள்ளது.

The post சென்னை மெட்ரோ ரயில் கட்டுமான பணிகளால் தாமதம்; சவாலாக உருவெடுத்துள்ள மழைநீர் வடிகால் சீரமைப்பு பணிகள்: பருவமழை தொடங்கும் முன்பே முடிக்க “மாநகராட்சி விறுவிறு” appeared first on Dinakaran.

Tags : Chennai Metro Rail ,Chennai ,DMK ,Dinakaran ,
× RELATED மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக அடையாறு...