×
Saravana Stores

தமிழ்நாட்டு திட்டங்களுக்கான நிதியை பெற முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்: நாளை பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்

* முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

* நாளை பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். அப்போது தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிலுவையில் உள்ள நிதிகளை விடுவிக்க கோரிய மனுவை பிரதமரிடம் அளிக்க உள்ளார்.

சென்னை: தமிழ்நாட்டின் திட்டங்களுக்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிதி குறித்து பிரதமர் மோடியுடன் விவாதிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளார். முதல்வருடன் முக்கிய அதிகாரிகள் மற்றும் எம்பிக்கள் உடன் செல்கின்றனர். பிரதமர் மோடி தலைமையிலான பாஜ அரசுக்கு தமிழ்நாட்டை பொறுத்தவரை நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என்ற நோக்கத்துடன் வஞ்சிக்கும் செயலில் ஈடுபட்டு வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் மாநில அரசால் முன்வைக்கப்படுகின்றன. அதற்கேற்ப ஒன்றிய அரசும் இந்தாண்டுக்கான பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் பெயரே இல்லாத நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ததையடுத்து பல்வேறு அரசியல் கட்சிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களின் கண்டனங்களை தெரிவித்தன. அண்மையில் தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 27ம் தேதி அமெரிக்கா சென்றிருந்தார்.

அங்கு உலகின் முன்னணி நிறுவனங்களுடன் தொழில் தொடங்குவதற்கான முதலீடுகளை ஈர்க்கும் வண்ணம் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதனையடுத்து இம்மாதம் 14ம் தேதி சென்னை திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின் நிருபர்களை சந்தித்து பேசுகையில், அமெரிக்கா பயணத்தின் மூலம் ரூ.7618 கோடிக்கு 19 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருப்பதாகவும், இதன் மூலம் 11,515 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்தார். அப்போது, தமிழகத்திற்கு ஒன்றிய அரசால் அளிக்கப்பட வேண்டிய திட்டங்களுக்கான நிதியை பெற பிரதமரை விரைவில் சந்திப்பேன் எனக் கூறினார். இந்நிலையில் பிரதமரை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பதற்காக இன்று மாலை 5 மணிக்கு சென்னை விமானநிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார். முதல்வரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவேற்க உள்ளனர்.

அதன்படி, இன்று இரவு டெல்லியில் உள்ள தமிழ்நாடு விருந்தினர் மாளிகையில் தங்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், நாளை பிரதமர் மோடியை தனது நாடாளுமன்ற சகாக்களுடன் இணைந்து சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பின் போது தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிலுவையில் உள்ள நிதிகளை விடுவிக்க கோரிய மனுவை அவர் பிரதமரிடம் அளிக்க உள்ளார். குறிப்பாக, மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கும்படி ஒன்றிய அரசிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கப்படாமல் உள்ளது. இதுகுறித்து பல முறை மக்களவை மற்றும் மாநிலங்களவையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியும் அதற்கான உரிய பதிலை அளிக்காமல் ஒன்றிய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. எனவே, பிரதமரிடம் முதல்வர் விவாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் எஸ்எஸ்ஏ திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசின் பங்கை தராமல் தாமதித்து வருவதையும், தேசிய கல்வி கொள்கையை வலுக்கட்டாயமாக ஏற்க வைப்பதற்காக மாநிலங்களுக்கு நிதியை மறுத்து வருவதையும் இச்சந்திப்பின் வாயிலாக பிதமரிடம் முதல்வர் எடுத்துரைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், முதல்வரின் டெல்லி பயணத்தின் போது கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த பயணத்தை முடித்து நாளை மாலையே அவர் சென்னை திரும்ப உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post தமிழ்நாட்டு திட்டங்களுக்கான நிதியை பெற முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்: நாளை பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,K. Stalin ,Delhi ,PM Modi ,Principal ,M.U. K. Stalin ,Chennai Airport ,Modi ,First Minister ,Tamil ,
× RELATED நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!