×
Saravana Stores

காஷ்மீரில் 2ம் கட்ட தேர்தல்; 26 தொகுதிகளில் 56% வாக்குப்பதிவு: அமைதியாக நடந்தது


நகர்: ஜம்மு காஷ்மீரின் 6 மாவட்டங்களில் உள்ள 26 பேரவை தொகுதிகளில் 2ம் கட்ட தேர்தலில் 56 சதவீத வாக்குப்பதிவு நடந்தது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது சட்டப்பிரிவு கடந்த 2019ம் ஆண்டு ரத்து செய்யப்பட்ட பிறகு, 10 ஆண்டுகள் கழித்து 90 பேரவை தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. 7 மாவட்டங்களில் உள்ள 24 தொகுதிகளுக்கு கடந்த 18ம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது. முதற்கட்ட தேர்தலில் 61.38 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில் 6 மாவட்டங்களில் உள்ள 26 பேரவை தொகுதிகளுக்கு நேற்று 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, காங்கிரஸ் மாநில தலைவர் தாரிக் ஹமீத் கர்ரா, பாஜ தலைவர் ரவீந்தர் ரெய்னா உள்பட மொத்தம் 239 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மொத்தம் 3,502 வாக்குச்சாவடிகளில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்தது.

13,000 பேர் தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர். மாலையில் மொத்தம் உள்ள 26 தொகுதிகளிலும் 56.05 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக காஷ்மீர் தேர்தல் அதிகாரி பி.கே. போல் தெரிவித்தார். மேலும் எந்தவித வன்முறை சம்பவங்கள் இல்லாமல் அமைதியாக வாக்குப்பதிவு நடந்ததாக அவர் குறிப்பிட்டார். தூதர்கள் பார்வையிட்டனர்: இந்த தேர்தலை பார்வையிடுதற்காக அமெரிக்கா, நார்வே, சிங்கப்பூர் உட்பட 16 நாடுகளை சேர்ந்த தூதர்கள் அடங்கிய பிரதிநிதிகள் குழு ஜம்மு வந்துள்ளனர். இவர்கள் நேற்று நடந்த இரண்டாவது கட்ட வாக்குப்பதிவை பார்வையிட்டனர்.

டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் துணை தலைவர் ஜோர்கன் கே ஆன்ட்ரூஸ், தேர்தல் வாக்களிப்பு செயல்முறை ஆரோக்கியமானதாகவும், மகிழ்ச்சியானதாகவும் இருக்கிறது. 10ஆண்டுகளுக்கு பின் காஷ்மீர் மக்கள் வாக்களிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தேர்தல் முடிவுகளை காண்பதற்கு உற்சாகமாக இருக்கிறோம். எங்களது நாட்டில் உள்ளது போன்றே இங்கேயும் தேர்தல் செயல்முறை இருக்கின்றது” என்றார்.

‘ஜம்மு தேர்தல் வரலாறு படைக்கிறது’
டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் வரலாறு படைக்கிறது. இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் தங்களது முறைக்காக நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். இரண்டாவது கட்ட தேர்தல் முழுவதும் சிசிடிவி கேமராக்களால் கண்காணிக்கப்பட்டது”என்றார்.

The post காஷ்மீரில் 2ம் கட்ட தேர்தல்; 26 தொகுதிகளில் 56% வாக்குப்பதிவு: அமைதியாக நடந்தது appeared first on Dinakaran.

Tags : Kashmir ,Jammu and ,Dinakaran ,
× RELATED ஜம்மு காஷ்மீர் சட்டபேரவையில் மக்கள்...