டெல்லி : 3 வேளாண் சட்டங்களை திரும்ப கொண்டு வர வேண்டும் என்ற தனது பேச்சுக்கு பாஜக எம்.பி. கங்கனா ரனாவத் பகிரங்க மன்னிப்பு கோரினார். இமாச்சல் பிரதேசத்தின் மண்டி தொகுதியின் எம்.பி-யும், நடிகையுமான கங்கனா ரனாவத் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, நாட்டின் வளர்ச்சியில், விவசாயிகள்தான் நமது பலம். விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
சர்ச்சைக்குரிய கருத்தாக இருந்தாலும் பரவாயில்லை. ஒரு சில மாநிலங்கள் மட்டுமே எதிர்த்த மூன்று வேளாண் சட்டங்களை, விவசாயிகளின் நலன்களை மனதில் கொண்டு மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று நான் கைகளைக் கூப்பி கேட்டுக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டார். இந்த வீடியோ வைரலான நிலையில், கங்கனா ரானாவத்துக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. எதிர்ப்பு வலுத்ததை அடுத்து கங்கனா ரனாவத் தெரிவித்த கருத்துக்கும் பாஜகவுக்கும் தொடர்பு இல்லை என கட்சி அறிவித்தது.
இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா, விவசாயிகளின் நலன் கருதி ரத்து செய்யப்பட்ட விவசாயச் சட்டங்களை திரும்பக் கொண்டு வர வேண்டும் என்ற எம்.பி கங்கனா ரனாவத்தின் சர்ச்சைக்குரிய அறிக்கையிலிருந்து பாஜக விலகிக்கொள்கிறது. இது அவரது தனிப்பட்ட கருத்து என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். கங்கனா ரனாவத் கவனத்துடன் பேச வேண்டும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், 3 வேளாண் சட்டங்களை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்ற பேச்சுக்காக பாஜக எம்.பி. கங்கனா ரனாவத் மன்னிப்பு கேட்டார். கட்சியின் கண்டிப்பை அடுத்து தனது பேச்சுக்காக பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார் கங்கனா ரனாவத். வேளாண் சட்டங்கள் குறித்த தனது பேச்சை திரும்ப பெறுவதாகவும்; பாஜகவின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்வதாவும் கங்கனா அறிவித்துள்ளார்.
The post வேளாண் சட்டம் சர்ச்சை.. பாஜகவின் கண்டிப்பை அடுத்து தனது பேச்சுக்கு பகிரங்க மன்னிப்பு கோரினார் எம்.பி. கங்கனா ரனாவத்!! appeared first on Dinakaran.