×
Saravana Stores

கல்வியாண்டு நடுவில் கட்டணத்தை தனியார் பள்ளிகள் உயர்த்தக்கூடாது

சென்னை: கட்டண உயர்வு தொடர்பாக சென்னை கீழ்கட்டளையில் செயல்படும் தனியார் பள்ளியில் அதிகாரி விசாரணை மேற்கொண்டுள்ளனர். கல்வியாண்டு நடுவில் கட்டணத்தை தனியார் பள்ளி உயர்த்தக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

செங்கல்பட்டு தனியார் பள்ளி மாவட்ட இயக்குனர் அங்கையற்கண்ணி, பள்ளியில் நேரில் ஆய்வுசெய்தார். ஹோலி பேமலி கான்வென்ட் பள்ளியில் 2-ம் பருவ கட்டணம் திடீரென்று உயர்த்தப்பட்டது. கட்டண உயர்வு தொடர்பாக சென்னை கீழ்கட்டளையில் செயல்படும் தனியார் பள்ளியில் அதிகாரி விசாரணை நடத்தி வருகிறார்.

மடிப்பாக்கம், மேடவாக்கம் மெயின் ரோட்டில் பிரபல தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு எல்கேஜி முதல் 12ம் வகுப்பு வரை ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை உயர்த்தி உள்ளதாக பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.

குறிப்பாக, 1ம் வகுப்புக்கு ரூ.4 ஆயிரமாக இருந்த கட்டணம் ரூ.9,500 எனவும், 5ம் வகுப்புக்கு ரூ.4,500 என இருந்த கட்டணத்தை ரூ.11,500 எனவும், 10ம் வகுப்புக்கு ரூ.6 ஆயிரமாக இருந்த கட்டணத்தை ரூ.11 ஆயிரம் எனவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதையறிந்த மாணவர்களின் பெற்றோர் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து, உயர்த்தப்பட்ட கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என்று பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் எந்த பலனும் இல்லை. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர், நேற்று காலை பள்ளி முன்பு குவிந்தனர். திடீரென பள்ளியை முற்றுகையிட்டு கோஷமிட்டனர். பின்னர், பள்ளி முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மேடவாக்கம் – பரங்கிமலை சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து மடிப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்ட பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பள்ளி நிர்வாகத்தினரும் வரவழைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது, பழைய கட்டண முறைகளை வசூலிக்க அறிவிப்பு செய்யப்படும். புதிய கட்டண முறை திரும்ப பெறப்படும் என பள்ளி நிர்வாகம் சார்பில் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து மறியல் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

இந்நிலையில் இன்று கட்டண உயர்வு தொடர்பாக சென்னை கீழ்கட்டளையில் செயல்படும் தனியார் பள்ளியில் அதிகாரி விசாரணை மேற்கொண்டுள்ளனர். கல்வியாண்டு நடுவில் கட்டணத்தை தனியார் பள்ளி உயர்த்தக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். செங்கல்பட்டு தனியார் பள்ளி மாவட்ட இயக்குனர் அங்கையற்கண்ணி, பள்ளியில் நேரில் ஆய்வு செய்தார்.

The post கல்வியாண்டு நடுவில் கட்டணத்தை தனியார் பள்ளிகள் உயர்த்தக்கூடாது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Angaiankhanni ,Chengalpattu Private School ,
× RELATED சென்னை போரூர் அருகே மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை