×
Saravana Stores

வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் ஆனைமலை பகுதியில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை

*நெடுஞ்சாலைத்துறையினர் தகவல்

பொள்ளாச்சி : ஆனைமலை உட்கோட்ட பகுதிகளில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக, தேவையான உபகரணங்கள் தயார் நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை சுற்றுவட்டார பகுதியில் கடந்த மே மாதம் பெய்த கோடை மழைக்கு பிறகு, கடந்த ஜூன் 2வது வாரம் துவங்கிய தென்மேற்கு பருவ மழையானது ஆகஸ்ட் மாதம் துவக்கம் வரை என ஒன்றரை மாதத்திற்கு மேலாக பரவலாக பெய்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழைக்கு பிறகு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் வடகிழக்கு பருவமழை பெய்யும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாகும். இந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழைக்கு பிறகு, கடந்த சில வாரமாக மழை குறைந்து வெயிலின் தாக்கம் இருந்தாலும், சில நேரங்களில் சாரலுடன் மழை பெய்கிறது. இதனால் வடகிழக்கு பருவமழை விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பருவமழை காலத்தில் மழை பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதில் ஆனைமலை உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறைக்குட்பட்ட பகுதிகளில் பருவ கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலையருகே உள்ள கோட்டூர், ஆனைமலை வேட்டைக்காரன்புதூர், சேத்துமடை மற்றும் மீன்கரை ரோடு, பாலக்காடுரோடு, கோவிந்தாபுரம், மீனாட்சிபுரம் பகுதிகளில் பருவமழையின்போது காட்டாற்று வெள்ளம் மற்றும் கால்வாய் பாதிப்பு, மண் சரிவு உள்ளிட்ட பாதிப்புகளை தடுக்க அதற்கான உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

திடீர் என மண் சரிவு ஏற்படும் பகுதியிலும் வைப்பதற்காக மணல் அடங்கிய மூட்டைகள் தயார் நிலையில் உள்ளது. பலத்த காற்றுக்கு மரம் விழுந்தால் அதனை அப்புறப்படுத்த தேவையான அறுவை இயந்திரம் உள்ளிட்டவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து, ஆனைமலை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் தினேஷ்குமார், இளநிலை பொறியாளர் செந்தில்குமார் ஆகியோர் கூறுகையில், ‘‘வடகிழக்கு பருவமழையின்போது ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

இதில், ஆனைமலை நெடுஞ்சாலைத்துறை மூலம், மழைக்காலத்தில் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கான போதிய உபகரணங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளதுடன், பணியாளர்களும் தயார்நிலையில் உள்ளனர்’’ என்றனர்.

The post வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் ஆனைமலை பகுதியில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Anaimalai Region ,Northeastern ,POLLACHI ,ANAIMALAI ,Pollachchi ,
× RELATED பொள்ளாச்சியில் நள்ளிரவில் சடலத்தை புதைத்த மர்ம நபர்கள்