×
Saravana Stores

வேலூர் மாநகரில் திறந்திருக்கும் குடிநீர் வால்வு தொட்டிகளால் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் அபாயம்

வேலூர் : வேலூர் நகரில் பல்வேறு இடங்களில் திறந்திருக்கும் குடிநீர் வால்வு தொட்டிகளில் தேங்கி நிற்கும் தண்ணீரில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.வேலூர் மாநகர மக்களுக்கு காவேரி கூட்டுக்குடிநீர், பொன்னையாற்று கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மூலமும், ஓட்டேரியில் இருந்தும் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

இதற்கான பிரதான பைப் லைன்கள் அனைத்து வார்டுகளுக்கும் அந்தந்த மேல்நீர்த்தேக்க தொட்டிகளில் இருந்தும் செல்கிறது. இந்த பிரதான பைப் லைன்களில் இருந்து ஒவ்வொரு வார்டிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தெருக்களுக்கு ஒன்று வீதம் குடிநீர் வால்வுகளை திறந்து மூடும் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த கட்டமைப்புகள் தொட்டி வடிவில் பிரதான பைப் லைனில் உள்ள வால்வு அமைப்பை சுற்றி பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டுள்ளன.

திறந்த நிலையில் உள்ள இந்த தொட்டிகளில் பிரதான பைப் லைன் வால்வில் இருந்து கசியும் தண்ணீர், மழைநீர் தேங்கி நிற்பதுடன், அதில் குப்பைகளும் கலந்து துர்நாற்றம் வீசும் வகையிலும், கொசுக்கள் உற்பத்தியாகும் தொட்டியாக மாறி காட்சி அளித்துக் கொண்டுள்ளன.

அதேபோல் அந்த பகுதிக்கு புதிதாக வரும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் இந்த தொட்டிகளில் சிக்கி கீழே விழுந்து காயமடையும் சம்பவங்களும் நடந்து வருகிறது. இதுபோன்று வேலூர் சத்துவாச்சாரி ஆர்டிஓ சாலை பின்புறம், வேலூர் அரசமரப்பேட்டை, பெங்களூரு சாலை என பல்வேறு இடங்களில் குடிநீர் வால்வுகள் அமைந்துள்ள தொட்டிகள் திறந்த நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், டெங்கு பரவும் அச்சமும் ஏற்பட்டுள்ளது. இதற்காக சுகாதாரத்துறை உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து தேவையான நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன. வேலூர் மாநகராட்சி நிர்வாகமும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

அதேநேரத்தில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் சூழலுடன் திறந்த நிலையில் காணப்படும் இதுபோன்ற குடிநீர் வால்வு அமைந்துள்ள தொட்டிகளை சிலாப்புகள் கொண்டு மூட வேண்டும் என்று்ம், அப்படி சிலாப்புகள் கொண்டு மூடும்போது தொட்டிகளின் கட்டமைப்பை சாலை மட்டத்துடன் இருக்குமாறு செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

The post வேலூர் மாநகரில் திறந்திருக்கும் குடிநீர் வால்வு தொட்டிகளால் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் அபாயம் appeared first on Dinakaran.

Tags : Vellore ,Vellore city ,Cauvery ,Otteri ,Dinakaran ,
× RELATED வேலூர்-காட்பாடி சாலையில் புதிய...