ஜெருசலேம்: இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா முக்கிய கமாண்டர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. தங்களின் முக்கிய கமாண்டர் கொல்லப்பட்டது குறித்து ஹிஸ்புல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், “இப்ரஹிம் முகமது கொபெய்ஸி இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார்” எனத் தெரிவித்துள்ளது. மேலும் ஹிஸ்புல்லாக்கள் அவர்களுக்கே உரித்த பாணியில் “தெற்கு பெய்ரூட்டில் ஜெருசலேமுக்கான வழியில் முன்னேறியபோது முகமது கொபெய்ஸி வீரமரணமடைந்தார்.” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இஸ்ரேல் தரப்பிலோ கொபெய்ஸியுடன் இன்னும் இரண்டு முக்கியக் கமாண்டர்களையும் தங்கள் படைகள் வீழ்த்தியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2006-ம் ஆண்டுக்குப் பிறகு மிகப்பெரிய தாக்குதல் நடவடிக்கையாக இஸ்ரேல் ராணுவம் நேற்று முன்தினம் (திங்கள்கிழமை) லெபனானின் தெற்கு பகுதி நகரங்கள் மீது குண்டு மழை பொழிந்தது. குறிப்பாக, லெபனானின் ஹெர்மல், பிப்லோஸ், பால்பெக் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஆயுதங்களை பதுக்கி வைத்துள்ளதை இஸ்ரேல் உளவுத் துறை கண்டறிந்ததையடுத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த திங்கள்கிழமை தொடங்கி இதுவரை லெபனானில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 569 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவர்களில் 50 பேர் குழந்தைகள், 90 பேர் பெண்கள் எனத் தெரிகிறது.
லெபனான் வெளியுறவு அமைச்சக புள்ளிவிவரத்தின்படி தெற்குப் பகுதியில் இருந்து கடந்த 2 நாட்களில் 5 லட்சம் பேர் வெளியேறியிருப்பதாகத் தெரிகிறது. கடந்த அக்டோபர் தொடங்கி காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 16,500 குழந்தைகள் உள்பட 41,467 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை தொடங்கி இரண்டு நாட்களில் இஸ்ரேல் லெபனான் மீது நடத்திய தாக்குதலில் 569 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் காசாவில் தொடங்கி தனது தாக்குதல் எல்லைகளை விரிவுபடுத்தி மத்திய கிழக்கு நாடுகளில் மிகப்பெரிய போர் பதற்றத்தை உருவாக்கியுள்ளதாக உலக நாடுகள் பல கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றன.
லெபனான் மீதான தாக்குதல் தீவிரமடைந்து வரும் சூழலில் அமெரிக்காவில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் வலுத்துள்ளது. லாஸ் ஏஞ்சலஸ், நியூயார்க், வாஷிங்டன் நகரங்களில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கக் கூடாது, சுதந்திரமான பாலஸ்தீன நாடு அமைவதை உறுதி செய்ய வேண்டும், மத்திய கிழக்கு நாடுகளின் பிரச்சினைகளில் அமெரிக்கா தலையிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்கள் நடைபெற்றன.
முன்னதாக, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு லெபனான் மக்களுக்கு விடுத்த வீடியோ செய்தியில், “ஹிஸ்புல்லா அமைப்பினர் லெபனான் மக்களை நீண்டகாலமாக மனித கேடயமாக பயன்படுத்திவருகின்றனர். லெபனான் மக்களின் வீடுகளில் ராக்கெட்டுகளையும், அவர்களது கேரேஜில் ஏவுகணைகளையும் மறைத்து வைத்து அதை இஸ்ரேலுக்கு எதிராக பயன்படுத்தி வருகின்றனர். எனவே, இஸ்ரேல் மக்களை பாதுகாக்க அந்த ஆயுதங்களை அழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, லெபனான் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்துவெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைய வேண்டும். இஸ்ரேல் தாக்குதல் நடத்தி முடிந்ததும் தெற்கு லெபனான் மக்கள் மீண்டும் தங்களது குடியிருப்புகளுக்கு திரும்பலாம்” என்று கூறியிருந்தார்.
The post இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் பலி எண்ணிக்கை 569 ஆக அதிகரிப்பு: முக்கிய கமாண்டர் உயிரிழந்ததாக அறிவிப்பு appeared first on Dinakaran.