கூடலூர் : கூடலூரில், கள்ளிக்கோட்டை சாலையில் பேருந்து நிறுத்த பகுதியில் இயங்கி வந்த நகராட்சியின் பொது கட்டண கழிப்பறை கடந்த சில வருடங்களாக மூடப்பட்டு பழுந்தடைந்துள்ளதால் பொதுமக்கள், பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம், கூடலூர் அரசு போக்குவரத்துக்கழக கிளையில் இருந்து நாடுகாணி, தேவாலா, பந்தலூர், கொளப்பள்ளி, உப்பட்டி, அய்யன் கொல்லி, சேரம்பாடி, தாளூர், எருமாடு, பாட்டவயல், மற்றும் நாடுகாணி வழியாக கேரளாவிற்கும் ஏராளமான பேருந்துகள் சென்று வருகின்றன. இந்த பேருந்துகளில் செல்வதற்காக ஏராளமான பயணிகள் இப்பகுதியில் காத்து நிற்பது வழக்கம். இதேபோல் இப்பகுதிகளில் இருந்து பேருந்துகளில் வந்து இறங்கும் பயணிகளும் ஏராளம்.
இப்பகுதியில் இருந்து இயக்கப்படும் ஆட்டோக்களிலும் ஏராளமான பயணிகள் பயணிக்கின்றனர். மேலும் இப்பகுதியில் உள்ள வியாபார நிலையங்களுக்கு வந்து செல்லும் பொதுமக்களும், வியாபார நிலையங்களில் பணிபுரிபவர்களும் அதிக அளவில் உள்ளனர். பழைய பேருந்து நிலையத்தில் உள்ள நகராட்சி வணிக வளாகத்தின் உள்ளே இயங்கும் கழிப்பறை வெளியில் இருந்து வருபவர்களுக்கு பெரும்பாலும் தெரிய வாய்ப்பு இல்லை.
மேலும் பேருந்து நிலையத்திற்கும் கழிப்பறைக்கும் தூரம் அதிகமாக உள்ளது. குறிப்பாக இப்பகுதியில் பேருந்துகளுக்கு காத்திருக்கும் பெண்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் இப்பகுதியில் இயங்கி வந்த பொதுக்கழிப்பறையை மீண்டும் திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post கூடலூரில் பழுதடைந்து கிடக்கும் நகராட்சி கட்டண கழிப்பறையை சீரமைக்க பயணிகள் கோரிக்கை appeared first on Dinakaran.