×
Saravana Stores

கடந்த ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட திட்டம் ₹73 லட்சத்தில் நகராட்சி பூங்கா புதுப்பிப்பு

* நவீன வசதிகளுடன் பயன்பாட்டுக்கு வந்தது

* சிறுவர், சிறுமிகள் உற்சாகம்

* நடைமேடைகள், மழைநீர் வடிகால் வசதிகளுடன் அமைக்கப்பட்டது

திருவாரூர் : திருவாரூர் நகரில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.73 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட நகராட்சி பூங்கா மக்களின் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்பட்டது.30 வார்டுகளை கொண்ட திருவாரூர் நகராட்சி பகுதியில் கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 58 ஆயிரம் மக்கள் வசித்து வரும் நிலையில் தற்போது 13 ஆண்டு காலத்தில் இந்த மக்கள் தொகை என்பது மேலும் உயர்ந்துள்ளது. இதுமட்டுமின்றி மாவட்ட தலைநகராக இருந்து வருவதன் காரணமாக இங்குள்ள பல்வேறு அலுவலகங்களுக்கு வருபவர்கள், மத்திய பல்கலைகழகம் உட்பட பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு வந்து செல்லும் மாணவ, மாணவிகள் என நாள் ஒன்றுக்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த நகரை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நகரின் மையபகுதியான பனகல் சாலையில் நகராட்சியின் சோமசுந்தரம் பூங்காவானது மாலை நேரங்களில் பொது மக்களின் பொழுது போக்கும் ஒரே இடமாக இருந்து வந்த நிலையில் கடந்த அதிமுக ஆட்சியில் 10 ஆண்டு காலத்தில் எவ்வித பராமரிப்பும் செய்யப்படாமல் பூங்கா முழுவதும் புல் வெளிகள் மண்டியவண்ணம் இருந்து வந்தது.

இந்த பூங்காவின் உள்ளே மனுநீதி சோழன் மணிமண்டபமும் இருந்து வரும் நிலையில் இதனை உடனடியாக சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்பதுடன் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு சாதனங்களையும் அமைத்து தரவேண்டும் என நகராட்சி நிர்வாகத்திற்கு பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து விடுத்து வந்த கோரிக்கை குறித்து தினகரனில் அவ்வபோது படத்துடன் செய்தி வெளியிடப்பட்டு வந்தது.

இதற்கிடையே தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டம் என்ற பெயரில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனையொட்டி திருவாரூர் மாவட்டம் மட்டுமின்றி மாநில முழுவதும் இந்த கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டத்தில் 2021 – 22ம் நிதியாண்டில் மட்டும் ரூ.2 ஆயிரம் கோடி அளவிற்கு பணிகள் நடைபெற்றன. அதன்படி இந்த சோமசுந்தரம் பூங்காவும் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ 41 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறந்துவைக்கப்பட்டன.

இந்நிலையில் நகரையொட்டியவாறு பொது மக்கள் அதிகளவில் வசித்து வரும் இடமாக இருந்து வரும் வாசன் நகரில் முதியோர் மற்றும் குழந்தைகளின் நலன் கருதி புதிய பூங்கா ஒன்று அமைக்கவேண்டும் என நகராட்சி நிர்வாகத்திற்கு பொது மக்கள் அளித்த கோரிக்கையின் பேரில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 73 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் புதிதாக பூங்கா ஒன்று கட்டும் பணி கடந்த ஒரு வருட காலமாக நடைபெற்றது.

இந்நிலையில் இதற்கான பணிகள் முடிவுற்றதையடுத்து பொது மக்கள் பயன்பாட்டிற்காக இந்த பூங்காவினை நகராட்சி தலைவர் புவனப்பிரியாசெந்தில் தலைமையிலும், துணை தலைவர் அகிலாசந்திரசேகர், கமிஷனர் பிரபாகரன் ஆகயோர் முன்னிலையில் எம்.எல்.ஏ பூண்டிகலைவாணன் திறந்துவைத்தார். இதில் நகராட்சி நியமனகுழு உறுப்பினர் பிரகாஷ், கவுன்சிலர்கள் செந்தில், சங்கர், நகராட்சி பொறியாளர் சதீஷ்பாபு மற்றும் கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.

புதிதாக திறக்கப்பட்டுள்ள இந்த பூங்காவில் குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், முதியோர்கள் உட்பட அனைவரின் நடைபயிற்சிக்காக 4 புறமும் நடைமேடைகள், மழைநீர் வடிகால்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளதுடன் அரசின் மகளிர் உரிமைதொகை, புதுமைபெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்த தகவல்களும் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post கடந்த ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட திட்டம் ₹73 லட்சத்தில் நகராட்சி பூங்கா புதுப்பிப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruvarur ,Dinakaran ,
× RELATED திருவாரூர் மாவட்டத்தில் நிலுவை...