*வட்டார போக்குவரத்து அலுவலர் எச்சரிக்கை
விழுப்புரம் : விழுப்புரத்தில் விதிகளை மீறி இயங்கும் ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று வட்டாரப் போக்குவரத்து அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விழுப்புரம் நகரில் கடந்த சில நாட்களாக ஷேர் ஆட்டோக்கள், ஆட்டோ ரிக்ஷாவில் பயணிகள் ஏற்றுவதில் மோதல் நீடித்து வந்தன.
மேலும் விதிகளை மீறி ஆங்காங்கே பயணிகளை நிறுத்தி ஏற்றுவதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டன. இதுகுறித்து விழுப்புரம் நகரில் ஷேர் ஆட்டோ மற்றும் ஆட்டோ ரிக்ஷா போக்குவரத்தை முறைப்படுத்துவது குறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர், காவல் துறை முன்னிலையில் முத்தரப்பு கூட்டம் நடைபெற்றது.
வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். போக்குவரத்து காவல்நிலைய இன்ஸ்பெக்டர் வசந்தகுமார், வட்டார மோட்டார் போக்குவரத்து ஆய்வாளர்கள் மாணிக்கம், கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில், கோலையனூர் சாலையில் இருந்து புதிய பேருந்து நிலையம் வரை இயங்கி வந்த ஷேர் ஆட்டோக்கள் அர்ச்சனா ஓட்டல் எதிர்புறம் உள்ள ஸ்டாண்டில் போக்குவரத்து இடையூறு ஏற்படாத வகையில் பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும்.
மேலும் எக்காரணம் கொண்டும் ஷேர் ஆட்டோக்கள் புதிய பேருந்து நிலையம் தாண்டி ஜானகிபுரம் சாலையில் பயணிகளை ஏற்றவும். இறக்கவும் அனுமதிக்கப்பட மாட்டாது. ஜானகிபுரம், மாம்பழப்பட்டு ரோடு உள்ளிட்ட பிற பகுதிகளில் இயங்கி வரும் ஆட்டோ ரிக் ஷாக்கள் பின்புறம் பாதி கதவை திறந்து வைத்திருந்து பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடாது.
அவ்வாறு இயக்கப்படும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நேருஜி சாலை உள்ளிட்ட சாலைகளில் பள்ளி மாணவர்களை ஏற்றி செல்லும் ஆட்டோ ரிக்ஷாக்கள் 6 மாணவர்களுக்கு மேல் ஏற்றிச் செல்லக்கூடாது. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். புதிய பேருந்து நிலைய வெளிப்புறம் நிறுத்தப்பட்டுள்ள காத்திருப்பு ஆட்டோக்கள் சாலையை ஆக்கிரமிப்பு செய்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதால் இருபுறங்களிலும் 10 ஆட்டோக்கள் மட்டுமே காத்திருப்புக்காக நிறுத்தப்பட வேண்டும்.
மற்ற ஆட்டோக்கள் நகராட்சி திடலில் ஸ்டாண்டில் நிறுத்தப்பட்டு சீனியாரிட்டி முறையில் புதிய பேருந்து நிலையம் காத்திருப்பு ஸ்டாண்டில் நிறுத்தப்பட வேண்டும். அவ்வாறு இல்லாமல் நிபந்தனையை மீறி நிறுத்தப்பட்டுள்ள ஆட்டோ மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஷேர் ஆட்டோக்கள் புதிய பேருந்து நிலையம், ரங்கநாதன்ரோடு ஜங்ஷன், ஹரி ஹாஸ்பிடல், மார்க்கெட் கமிட்டி, பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை, ரயில்வே ஜங்ஷன், மாதா கோயில், சவிதா தியேட்டர், கம்பன்நகர், தேவநாதசுவாமி நகர், கோலியனூர் மற்றும் பழைய அரசு மருத்துவமனை, பிள்ளையார் கோயில் நிறுத்தம், காட்பாடி மேம்பாலம், அண்ணாமலை ஹோட்டல் ஜங்ஷன் வரையிலும் மற்றும் மாம்பழபட்டு சாலையில் இந்திராநகர் வரை செல்ல வேண்டும்.
மேலும் ஷேர் ஆட்டோக்கள் மற்றும் ஆட்டோ ரிக் ஷாக்கள் வளைவுகளிலோ அல்லது ஜங்ஷன்களிலோ பயணிகளை ஏற்றுவதற்கு அல்லது நிறுத்தி இறக்குவதற்கோ, பயணிகளை ஏற்ற காத்திருந்து நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தினால் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்யப்படும் என்று முடிவெடுத்து ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
The post விழுப்புரத்தில் முத்தரப்பு கூட்டம் விதிகளை மீறி இயங்கும் ஷேர் ஆட்டோ ரிக்ஷாக்கள் பறிமுதல் செய்யப்படும் appeared first on Dinakaran.