*பாசன வாய்க்கால் அமைத்து தர வலியுறுத்தல்
காட்டுமன்னார்கோவில் : நேரடி நெல் விதைப்பு மூலம் சம்பா சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டையில் மிக பெரிய வீராணம் ஏரி உள்ளது. ஏரியின் மொத்த நீர் மட்டமான 47.50 அடியில், தற்போது 42 கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து 860 கன அடிவரை உள்ளது. சென்னை குடிநீருக்கு சராசரியாக 67 கன அடி தண்ணீர் செல்கிறது.
நேரடியாக 50 ஆயிரம் ஏக்கரும், மறைமுகமாக 50 ஆயிரம் ஏக்கரும் என மொத்தம் ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் பாசனம் தந்து வரும் வீராணம் ஏரி மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. மேலும் விவசாயிகள் போர்வெல் மற்றும் மழைநீர் மூலம் பாசனம் பெற்று வந்தாலும், பயிர் செய்து வரும் விவசாய பயிர்களுக்கு பாரம்பரிய சாகுபடி முறையான ஏரி பாசனத்தின் மூலம் கிடைக்கும் தண்ணீரை பயன்படுத்தி பாசனம் செய்யும் போது விவசாய பயிர்களில் நோய் தாக்குதல் குறைந்து மகசூல் அதிகரிக்கும் என விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தஞ்சை மாவட்டம் கீழ் அணை தலைப்பிலிருந்து பாசனம் பெறும் வடவாறு, வடக்கு ராஜன் மற்றும் தெற்கு ராஜன் வாய்க்கால்கள் ஆகியவற்றில் பாசனத்திற்கு வேளாண் துறை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் மற்றும் பொதுப்பணித்துறையினர் முன்னிலையில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதை தொடர்ந்து வீராணம் ஏரியின் ராதா மதகிலிருந்தும் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பல்வேறு மதகு வழியாக செல்லும் தண்ணீரை பயன்படுத்தி ஆண்டுதோறும் இந்த பகுதியில் சம்பா சாகுபடியின் போது விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு பணியில் தீவிரமாக ஈடுபடுவர். சில குறிப்பிட்ட பகுதிகளில் நாற்றங்கால் தயார் செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். காட்டுமன்னார்கோவில், குமராட்சி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 40க்கும் மேற்பட்ட எக்டர் விளை நிலங்களில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு மூலம் சம்பா சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், எங்கள் பகுதியில் வீராணம் ஏரி தண்ணீர் மற்றும் மழை நீரை நம்பி 5000 ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்து வருகிறோம். இந்த வருடம் கோடை மழை அதிக அளவில் இல்லாததால் வீராணம் ஏரி முற்றிலும் வறண்டு காணப்பட்டது. ஆனால் கடந்த மாதங்களில் ஏரியானது முழு கொள்ளளவை எட்டியது.
இதை தொடர்ந்து சம்பா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. தண்ணீரை பயன்படுத்தி சம்பா நேரடி நெல் விதைப்பு பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம். சில பகுதிகளில் வெளியூரில் இருந்து ஆட்கள் வரவழைத்து பணியை மேற்கொண்டு வருகின்றனர் திருச்சி -சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை வந்ததால், பாசன வடிகால் வசதி இல்லாத நிலை உள்ளது. இதனால் வரும் மழை காலத்தில் மழை நீர் வெளியேற முடியாமல் சம்பா சாகுபடி கேள்விக்குறியாக உள்ளது. பாசன வாய்க்காலை மீண்டும் அமைத்து தர வேண்டும், என்றார்.
The post நேரடி நெல் விதைப்பு மூலம் சம்பா சாகுபடியில் விவசாயிகள் தீவிரம் appeared first on Dinakaran.