நாகர்கோவில் : நாகர்கோவில் முதல் காவல்கிணறு வரை உள்ள 4 வழிச்சாலை ஓரத்தில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி வனத்துறை சார்பில் நேற்று தொடங்கியது.
தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தமிழக அரசு தொடங்கி வைத்துள்ளது. பசுமை தமிழகம் இயக்கத்தின் கீழ் இந்த மரக்கன்றுகள் நடும் நிகழ்வுகள் நடந்து வருகின்றன. குமரி மாவட்டத்தில் காவல்கிணறு முதல் கன்னியாகுமரி வரை உள்ள 4 வழிச்சாலை ஓரத்தில் ஏற்கனவே 4 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு, அந்த செடிகள் அனைத்தும் மரமாக வளர்ந்துள்ளது.
இந்நிலையில் நாகர்கோவில் முதல் காவல்கிணறு வரை உள்ள நான்கு வழிச்சாலையின் ஓரத்தில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி நேற்று தொடங்கியது. நாவல்மரம், புங்கை, சரக்கொன்றை, வேம்பு, புளி, ஆலமரம், அரசமரம் உள்ளிட்ட செடிகள் நடப்பட்டு வருகிறது. இந்த செடிகளை வனத்துறை நடவு செய்து வருகிறது.இது குறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்காக அகற்றப்பட்ட ஒரு மரத்திற்கு 3 மரங்கள் வைக்க முடிவு செய்யப்பட்டது.
நாகர்கோவில்- காவல்கிணறு வரை உள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நான்குவழி சாலையோரம் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஆரல்வாய்மொழியில் மரச்செடிகள் கடந்த 6 மாதகாலமாக வளர்த்து வருகிறோம். நேற்று தமிழக முதல்வர் தொடங்கி வைத்த நிலையில் நாகர்கோவில் காவல்கிணறு வரை உள்ள 4 வழிச்சாலை ஓரத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியை தொடங்கியுள்ளோம்.
சாலையின் ஓரத்தில் மழைநீர் வடிகால் உள்ளது. இந்த வடிகாலில் இருந்து 3 மீட்டர் தூரத்தில் மரச்செடிகள் நடவு செய்து வருகிறோம். இதற்காக பொக்லைன் இயந்திரம் மூலம் 2 அடி அகலம், 2 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டு செடிகள் நடவு செய்யப்பட்டு வருகிறது. இந்த செடிகளுக்கு 3 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச முடிவு செய்துள்ளோம். ஒரு வருடகாலம் பராமரித்துவிட்டு, அதனை தேசிய நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைத்து விடுவோம். காவல்கிணறு முதல் கன்னியாகுமரி வரை உள்ள நான்குவழிச்சாலையின் ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள மரச்செடிகள் பெரியதாக வளர்ந்துள்ளது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் இந்த மரத்தின் நிழலில் அமர்ந்து ஓய்வு எடுத்துச்செல்வதை பார்க்க முடிகிறது. என்றார்.
The post நாகர்கோவில் முதல் காவல்கிணறு வரை 4 வழிச்சாலை ஓரத்தில் 5 ஆயிரம் மரக்கன்று நடும்பணி appeared first on Dinakaran.