×
Saravana Stores

பருவ மழை காலங்களில் தண்ணீர் தேங்காது பார்த்துக் கொள்ள வேண்டும்

*ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் அறிவுரை

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை யொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்த அனைத்து துறை அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். எஸ்.பி சந்தீஷ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளதையொட்டி, மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது கலெக்டர் கூறும்போது, ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையானது அக்டோபர் மாதங்களில் துவங்கும். வடகிழக்கு பருவமழையை யொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணியாக அனைத்து நீர் நிலையங்களிலும் கரைகள் பலப்படுத்தி மழைநீர் வடிகால் வாய்க்கால் சீரமைத்து தயார் நிலையில் இருக்கும் வகையில் அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்.

கடந்த காலங்களில் தொடர் மழையின் போது மழைநீர் வடிகால் வாய்க்கால் உடைப்பு ஏற்பட்ட பகுதிகள் மற்றும் பொதுமக்கள் வசிப்பிட பகுதிகளில் தண்ணீர் தேங்கி இருந்து அப்புறப்படுத்தப்பட்டதை கவனத்தில் எடுத்துக் கொண்டு முன்னெச்சரிக்கையாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறையின் மூலம் பழுதடைந்த கட்டிடங்களை கண்டறிந்து அவற்றை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். நெடுஞ்சாலைத் துறையின் மூலம் மரங்கள் அப்புறப்படுத்துவதற்கான உபகரணங்கள் ஜே.சி.பி வாகனங்கள் மற்றும் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்க வேண்டும்.

சாலையில் பாலங்கள் உடைப்பு மற்றும் மரங்கள் சாய்ந்தால் அகற்றும் பணியினை துரிதமாக மேற்கொள்ள பணியாளர்களுடன் தயார் நிலையில் இருந்திட வேண்டும். மேலும் நகராட்சி, பேரூராட்சி மற்றும் பஞ்சாயத்துகளின் மழை காலங்களில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் மழை நீர் தேங்காது பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கேற்றவாறு உரிய பணிகளை மேற்கொள்ள பணியாளர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ள இடங்களில் மருந்துகள் தெளிக்கவும், குடிநீர் குலோரினேசன் செய்து வழங்கிட வேண்டும். கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் கால்நடைகளுக்கு தேவையான மருந்துகள் தயார் நிலையில் வைத்திட வேண்டும்.தீயணைப்புத் துறையின் மூலம் பேரிடர் காலத்தில் மீட்பு பணிக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் தயார் நிலையில் வைக்க வேண்டும். மீன்வளத்துறையுடன் ஒருங்கிணைந்து நீச்சல் வீரர்கள் மற்றும் படகுகள் தயார் படுத்தி தயார் நிலையில் வைத்திட வேண்டும்.

தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் மூலம் முன்கூட்டியே கள ஆய்வு செய்து தாழ்வாக செல்லும் மின் வயர்களை சரி செய்வதுடன் கூடுதலாக மின்கம்பங்கள் மற்றும் மின் மாற்றிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு வட்டத்திற்கும் நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அலுவலர்கள் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளார்கள்.

ஒவ்வொரு வட்டத்திலும் நியமிக்கப்பட்ட அலுவலர்கள் முன்கூட்டியே கள ஆய்வு செய்து வடகிழக்கு பருவமழையின் போது எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாத வகையில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டுமென தெரிவித்தார்.கூட்டத்தில் டி.ஆர்.ஓ. கோவிந்தராஜலு, பரமக்குடி சப்.கலெக்டர் அபிலாஷா கௌர், ஐ.என்.எஸ்.பருந்து கமாண்டன்ட் வினோத் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post பருவ மழை காலங்களில் தண்ணீர் தேங்காது பார்த்துக் கொள்ள வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Ramanathapuram district ,Simranjeet Singh Kalon ,
× RELATED தொழில் தொடங்க கடனுதவி பெற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்