×
Saravana Stores

முடுக்கன்குளத்தில் விஏஓ அலுவலகம் கட்ட வேண்டும்: குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

அருப்புக்கோட்டை, செப்.25 : முடுக்கன்குளத்தில் கிராம நிர்வாக அலுவலகம் கட்ட வேண்டும் என குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அருப்புக்கோட்டை ஆர்டிஓ அலுவலகத்தில் ஆர்டிஓ வள்ளிகண்ணு தலைமையில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் ஆர்டிஓ நேர்முக உதவியாளர் இரமணன், காரியாபட்டி, திருச்சுழி தாசில்தார்கள் கலந்து கொண்டனர். இதில் காவிரி, வைகை, குண்டாறு பாசன விவசாய சங்க கூட்டமைப்பு விருதுநகர் மாவட்ட தலைவர் ராம்பாண்டியன் பேசுகையில், காரியாபட்டி ஒன்றியம் மீனாட்சிபுரம் முக்குளம் சாலையில் அமைந்துள்ள ஆலங்குளத்தில் தனியாருக்கு சொந்தமான எத்தனால் ஆலை அமைய உள்ளது.

இதில் தினந்தோறும் 10 லட்சம் லிட்டர் தண்ணீர் போர்வெல் அமைத்து ராட்சச மின்மோட்டார் மூலம் எடுப்பதற்கு திட்டமிட்டுள்ளனர் என தெரிய வருகிறது. மேலும் இதன் கழிவுநீரை நீர்வழிப் பாதையில் விடும்போது 30க்கும் மேற்பட்ட கண்மாய்களுக்கு சென்று கண்மாய் தண்ணீர் நச்சுத்தன்மை கொண்ட கெமிக்கல் நீராக மாறும். இதன் அருகாமையில் இருக்கக்கூடிய 500க்கும் மேற்பட்ட பம்பு செட்டுகளும் சுமார் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விளை நிலங்களும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே மக்களை பாதிக்கக்கூடிய இந்த ஆலையை தடை செய்ய வேண்டும் என கூறினார்.

அகில இந்திய விவசாய சங்க தலைவர் முடுக்கன்குளம் சிவசாமி பேசுகையில், முடுக்கன்குளத்தில் கிராம நிர்வாக அலுவலகம் கட்டப்பட வேண்டும் என வலியுறுத்தினார். மீனாட்சிபுரம் ஜனார்த்தனம் பேசுகையில், நில அளவீடு செய்ய நவீன கருவிகள் வந்தபிறகும் இன்னும் பழைய முறைப்படி நில அளவீடு செய்கின்றனர். இதை மாற்ற வேண்டும். நிலம் சம்பந்தப்பட்ட கிராம கணக்குகளில் உரிய முறையில் சம்பந்தப்பட்ட பட்டாதாரரிடம் தெரிவித்து பெயர் பிழை இல்லாமல் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் பல்வேறு விவசாயிகள் தங்கள் பகுதி கோரிக்கையை தெரிவித்தனர். இக்கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, வனத்துறை மற்றும் மின்சாரத்துறை, கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post முடுக்கன்குளத்தில் விஏஓ அலுவலகம் கட்ட வேண்டும்: குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : VAO ,Mudukkankulam ,Kraditheer ,Aruppukkottai ,Farmers Grievance Redressal Day ,RTO ,RTO Vallikannu ,Dinakaran ,
× RELATED ரூ.200 ‘ஜிபே’ செலுத்தினால் பிறப்பு, சாதி...