சென்னை: போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான உண்டு உறைவிடப்பயிற்சி மற்றும் நான் முதல்வன் குடிமைப்பணி தேர்வுகளுக்கான படிப்பகம், தமிழ்நாடு மற்றும் இந்திய அளவிலான திறன் ேபாட்டிகள், நிரல் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத் தொகை மற்றும் சான்று வழங்கும் விழா சென்னையில் நேற்று நடந்தது. “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் நடந்த இந்த விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
தமிழ்நாட்டில் இருந்து ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ், ஐஎப்எஸ் போன்ற ஒன்றிய அரசின் பணிகளில் சேர்ந்து படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை, நான் முதல்வன் திட்டம் கொண்டு வந்த பிறகு அதிகரித்துள்ளது. போட்டித் தேர்வுகளில் முதற்கட்ட தேர்வில் வெற்றி பெற்றால் 10 மாதங்களுக்கு ரூ.7500 ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். இதில், கடந்த ஆண்டு நடந்த யுபிஎஸ் முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்ற 453 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1 கோடியே 13 லட்சத்து 25 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.
நான் முதல்வன் திட்டம் தொடங்குவதற்கு முன்பு, கடந்த ஆண்டில் தமிழ்நாட்டில் இருந்து மொத்தம் 36 பேர் தான் கலந்து கொண்டனர். இந்த திட்டம் தொடங்கிய முதல் ஆண்டிலேயே தமிழ்நாட்டில் இருந்து 47 பேர் கலந்து கொண்டனர். டாப்லிஸ்ட்டில் தமிழ்நாட்டில் இருந்து ஒருவர்கூட தேர்வாகவில்லை. இந்த திட்டம் வந்த பிறகு இந்த ஆண்டில் அகில இந்திய அளவில் முதல் 100 பேரில் 6 பேர் தேர்வு பெற்றுள்ளனர். இவர்கள் 6 பேரும் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயன் பெற்றவர்கள்.
2022ம் ஆண்டில் இருந்தே 585 பேர் யுபிஎஸ்சி முதன்மைத்தேர்வை முடித்துள்ளனர். இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்த பிறகு 638 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் 275 பேர், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நேரடியாக பயன்பெற்றவர்கள். இதுதான் இத் திட்டத்தின் வெற்றியாகும். யுபிஎஸ் தேர்வுகளை பொருளாதார பிரச்னைகளால் பலர் எழுத முன்வருவதில்லை. இதைப் போக்கும்விதமாக போட்டித் தேர்வுகளில் பங்கேற்போருக்கு கட்டணமில்லா படிப்புக் கூடம் மற்றும் 10 உறைவிடப் பயிற்சி மையங்கள் தொடங்கி வைக்கப்படுகிறது.
சென்னை அண்ணாநகரில் 1000 மாணவர்கள் படிக்கும் வகையில் படிப்புக் கூடம் திறக்கப்பட்டுள்ளது. சென்னை, கோவை, மதுரை ஆகிய மண்டலங்களில் போட்டித் தேர்வுக்கு தயாராவோருக்கு கட்டணமில்லா விடுதி வசதியை தமிழ்நாடு அரசு செய்து கொடுத்துள்ளது. சென்னையில் காரப்பாக்கம், ஸ்ரீவில்லிபுத்தூர், சேலம் ஆகிய இடங்களில் 3 தனியார் பொறியியல் கல்லூரிகளில் கட்டணமில்லா விடுதி வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.
இந்திய திறன் போட்டிகளில் தமிழ்நாடு 10வது இடத்தில் இருந்தது. தற்போது அது 3ம் இடத்துக்கு வந்துள்ளது. தமிழ்நாட்டு இளைஞர்கள் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம், உங்கள் திறமைக்கு சரியான பாதை அமைத்துக் கொடுக்க அரசு தயாராக இருக்கிறது. இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
The post நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்ட பிறகே குடிமைப்பணி தேர்வுகளில் தமிழக மாணவர்கள் பங்கேற்பது அதிகரித்துள்ளது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.