×
Saravana Stores

முன் அனுமதியின்றி பொதுச்சாலைகளில் ‘நோ பார்க்கிங்’ பலகை வைத்தால் நடவடிக்கை பாயும்: போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை

சென்னை: பொதுச் சாலைகளில் முன் அனுமதியின்றி ‘நோ பார்க்கிங்’ பலகைகள், தடுப்புகள் அமைத்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெருநகர போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சென்னை பெருநகர போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட அறிக்கை: சென்னை பெருநகர காவல் எல்லையில் குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்கள் ‘நோ பார்க்கிங்’ பலகைகள், மண் பைகள், தடுப்புகளை வைப்பது அதிகரித்து வருவது கண்டறியப்பட்டுள்ளது.

முறையாக அங்கீகாரம் இல்லாமல் பொது சாலைகளில் தடைகள் ஏற்படுத்துவதால் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு தேவையற்ற இடையூறு ஏற்படுகிறது. சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் முன் அனுமதியின்றி ‘நோ பார்க்கிங்’ பலகைகள், தடுப்புகள் அல்லது இதுபோன்ற தடைகளை பொதுச் சாலைகளில் ஏற்படுத்த எந்தவொரு தனி நபருக்கோ, குடியிருப்பு சங்கங்களுக்கோ அல்லது வணிக நிறுவனங்களுக்கோ அனுமதி இல்லை.

சாலையோரம் மற்றும் பொது இடங்களில் தனியார் வாகன நிறுத்தம் அல்லது பிற நோக்கங்களுக்காக அனுமதியின்றி ஆக்கிரமிப்பது சட்டவிரோதமானது. மோட்டர் வாகன சட்டம் 1988, பிரிவு 116ன் படி, போக்குவரத்து பலகைகளை அமைக்க அரசு அதிகாரிகளுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. எனவே, உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அனுமதியின்றி பலகைகள் அல்லது பொருட்களை வைத்து பொது சாலைகளுக்கு இடையூறாக செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை போலீசார் எச்சரித்துள்ளனர்.

The post முன் அனுமதியின்றி பொதுச்சாலைகளில் ‘நோ பார்க்கிங்’ பலகை வைத்தால் நடவடிக்கை பாயும்: போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Metropolitan traffic police ,Chennai Metropolitan Traffic Police ,Traffic Police ,Dinakaran ,
× RELATED கணேசபுரம் ரயில்வே சுரங்கப்பாதை...