சென்னை: தங்கம் விலை நேற்று புதிய உச்சத்தை தொட்டது. முதன்முறையாக கிராம் ரூ.7 ஆயிரத்தை தொட்டு, ஒரு சவரன் ரூ.56000க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் நகை வாங்குவோர் கலக்கம் அடைந்தனர்.சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. உலக அளவில் தங்கத்தின் தேவை அதிகரிப்பு, போர் பதற்றம் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தங்கம் அவ்வப்போது விலை உயர்வதும், குறைவதுமாக போக்கு காட்டி வந்தாலும், அடிப்படையில் கணிசமாக ஏற்றம் கண்டுவருவதே நிதர்சனமான உண்மையாகும். இந்த ஆண்டு மார்ச் மாதம் தங்கம் விலை உச்சத்தை தொட்டது. இதனால் ஏழை, நடுத்தர மக்களால் ஒரு குண்டுமணி தங்கம் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த ஜூலை 23ம்தேதி ஒன்றிய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி மீதான சுங்க வரி குறைக்கப்பட்டதால் விலை தடாலடியாக குறைந்தது.
மக்கள் சற்று ஆறுதல் அடைந்தனர். ஆனால் மீண்டும் தங்கம் மளமளவென எகிறியது. கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் இருந்து தங்கம் விலை படிப்படியாக உயரத் தொடங்கியது. அதிலும் கடந்த 10 நாட்களாக தாறுமாறாக தங்கம் விலை உயர்ந்தது. கடந்த 13ம்தேதி மட்டும் ஒரே நாளில் மட்டும் சவரனுக்கு ரூ.960 அதிகரித்தது. அந்தவகையில் நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.6,980க்கும், ஒரு சவரன் ரூ.55,840 என்கிற அதிகபட்ச விலையில் தங்கம் விற்பனையானது.
இதைத்தொடர்ந்து, நேற்று ஒரு கிராமுக்கு மீண்டும் ரூ.20 உயர்ந்து ரூ.7ஆயிரம் என்றும், ஒரு சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.56,000 என்றும், விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது. வரலாற்றில் முதல்முறையாக ஒரு கிராம் தங்கம் ரூ.7000க்கு விற்பனையாகி வருவது பொதுமக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. பண்டிகை காலம் மற்றும் சுப முகூர்த்த காலங்கள் என்பதால் நகை வாங்க காத்திருந்த மக்கள் தங்கம் விலை உயர்வால் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
The post புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை முதன்முறையாக கிராம் ரூ.7,000க்கு விற்பனை: ரூ.56,000 ஆனது சவரன் appeared first on Dinakaran.