திருச்சி: பழநி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் திரைப்பட இயக்குனர் மோகன் ஜி சென்னையில் நேற்று கைது செய்யப்பட்டார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்திற்கு பயன்படுத்தப்படும் நெய்யில், பன்றி கொழுப்பு, மாட்டு கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவை கலக்கப்பட்டதாக எழுந்த புகார் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக சமூகவலைதளங்கில் இயக்குனர் மோகன் ஜி வெளியிட்ட வீடியோவில், ‘துளியளவுகூட மனசாட்சி இல்லாமல் இத்தனை கோடி மக்கள் நம்பிக்கையில் விளையாடி இருக்கிறீர்கள். வைணவ முத்திரை வாங்கியவர்கள் எத்தனை லட்சம் பேர் புனிதமாக வாழ்ந்து வருகிறார்கள். இதை செய்த கொடிய மிருகங்களுக்கு கொடூரமான தண்டனை வழங்க வேண்டும். இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்கள்’ என பதிவிட்டிருந்தார்.
மற்றொரு வீடியோவில் பேசிய திரைப்பட இயக்குனர் மோகன் ஜி, ‘நமக்கு தெரிந்த கோயில் ஒன்றில் பிரசாதமாக வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகள் கலந்து பக்தர்களுக்கு வழங்கப்படுவதாக செவிவழி செய்தியாக கேள்விப்பட்டதாக தெரிவித்திருந்தார். அது பற்றி கேட்டதற்கு, ‘‘நான் கேள்விப்பட்டதைதான் சொன்னேன்’’ என்றார். இதுதொடர்பாக திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயில் இந்து அறநிலையத்துறை மேலாளர் கவியரசு, கடந்த 21ம் தேதி சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதில், ‘உலகம் முழுவதும் வாழும் இந்துக்கள் என்ன இளிச்சவாயர்களா’ என்ற தலைப்பில் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தில் ஆண்மை குறைவு ஏற்படுத்தும் மாத்திரைகளை பயன்படுத்துவதாக, உண்மைக்கு புறம்பான விமர்சனம் செய்து, கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். தமிழக மக்களிடையே மதநல்லிணக்கத்தை கெடுக்கும் வகையிலும், கலவரத்தை தூண்டும் வகையிலும், பொய்யான செய்தி பரப்பிய தமிழ் திரைப்பட இயக்குனர் மோகன் ஜி (39) மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.
இதைத்தொடர்ந்து, திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார் உத்தரவின்பேரில் சமயபுரம் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். எஸ்பி வருண்குமாரின் தனிப்படை போலீசார் நேற்று காலை சென்னை பழைய வண்ணார பேட்டையில் உள்ள இயக்குனர் மோகன் ஜி வீட்டிற்கு சென்று அவரை கைது செய்து திருச்சிக்கு அழைத்து வந்தனர். இதுதொடர்பாக விசாரணைக்கு பின் திருச்சி ஜே.எம். எண்.3 மாஜிஸ்திரேட் பாலாஜி முன்பு மோகன் ஜி ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணைக்கு பின்னர் இயக்குனர் மோகன் ஜியை சொந்த பிணையில் நீதிமன்றம் விடுவித்தது. 4 நாட்களுக்குள் இரு நபரின் ஜாமீன் தாக்கல் செய்யவும் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.
* பாஜ நிர்வாகி மீது 2 பிரிவுகளில் வழக்கு
திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பஞ்சாமிர்தம் தயாரிக்க திருப்பதி லட்டு விவகாரத்தில் சிக்கிய திண்டுக்கல்லை சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் இருந்து, நெய் வாங்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பாஜ நிர்வாகி செல்வகுமார் தவறான தகவல் பரப்பி இருந்தார்.
இதனை மறுத்த கோயில் நிர்வாகம் சார்பில் பாஜ நிர்வாகிகள் செல்வகுமார், வினோஜ் பி செல்வம் ஆகியோர் மீது பழநி அடிவாரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் போலீசார், கோவையை சேர்ந்த பாஜ தொழிற்பிரிவு மாவட்ட துணைத்தலைவர் செல்வகுமார் மீது மதம் சார்ந்த பிரச்னைகளை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டது, மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் தகவல் பரப்பியது என 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
The post பழநி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சை கருத்து சினிமா இயக்குனர் மோகன் ஜி கைது appeared first on Dinakaran.