பூந்தமல்லி,:கடந்த 2011ம் ஆண்டு பாஜ சார்பில் நடந்த ரத யாத்திரையின் ஒரு பகுதியாக மதுரைக்கு பாஜ மூத்த தலைவர் அத்வானி வந்தார். அப்போது அவர் சென்ற பகுதியில் பைப் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்தில் ஜாகிர் உசேன் (37) என்பவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் பாதுகாப்பு கருதி கடந்த 2 மாதங்களாக பூந்தமல்லியில் உள்ள தனி கிளைச் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் கடந்த 18ம் தேதி சிறையில் ஜாகீர் உசேன் எறும்பு பவுடரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஜாகீர் உசேனை சிகிச்சைக்காக சேர்த்தனர்.
சிறையில் உள்ள ஜாகீர் உசேனுக்கு கடந்த 6 மாதத்திற்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால், ஜாமீன் கிடைத்தும் அதற்குரிய ஆவணங்கள் மற்றும் தொகையை சமர்ப்பிக்க முடியாததால் அவர் சிறையில் இருந்து வெளியே செல்ல முடியாத நிலை இருந்து வந்துள்ளது. அந்த விரக்தியில் ஜாகீர் உசேன் சிறையில் தற்கொலைக்கு முயன்று இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து ஸ்டான்லி மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பதற்காக சோதனை செய்தபோது, தான் பிளேடை விழுங்கியதாக அவர் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்ட மருத்துவர்கள் மற்றும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் வயிற்றில் ஸ்கேன் செய்து பார்த்தபோது சிறிய அளவிலான பிளேடு இருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து சிகிச்சைக்கு ஒத்துழைக்காமல் இருந்த அவர் சிகிச்சை பெறுவதற்கு ஒப்புக்கொண்டார். பிறகு நேற்று பூந்தமல்லி தனி கிளை சிறையில் ஜாகிர் உசேன் மீண்டும் அடைக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சையின் போது திரவ உணவுகள் மட்டும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது அவரது வயிற்றில் இருந்து பிளேடு துண்டு வெளியே வந்துவிட்டதா என்பதை கண்டறிய மீண்டும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க சிறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். பூந்தமல்லி தனி கிளை சிறையில் உள்ள கைதிகளுக்கு சேவிங் செய்துகொள்ள பிளேடு கொடுப்பது வழக்கம். அப்படி கிடைத்த பிளேடை அவர் விழுங்கியது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.
The post கைதி எறும்பு பவுடர் சாப்பிட்டதில் திருப்பம்; பிளேடை விழுங்கியது அம்பலம்: சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுத்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.