×

ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்டு 2 போலீசாரை கொன்ற ரவுடி சுட்டுக் கொலை: உத்தரபிரதேச போலீஸ் அதிரடி

காஜிபூர்: மதுபான கடத்தலை தடுத்த போது ஓடும் ரயிலில் 2 கான்ஸ்டபிள்களை தள்ளிவிட்டு கொன்ற ரவுடியை உத்தரபிரதேச போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் 19ம் தேதி இரவு, பார்மர்-கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் இரண்டு ஆர்பிஎப் போலீஸ்காரர்கள் ஜாவேத் கான், பிரமோத் குமார் ஆகியோர் பணியில் இருந்தனர். அவர்கள் ரயிலில் சட்டவிரோதமாக மதுபானம் கடத்திய நபர்களை அடையாளம் கண்டு, அவர்களிடம் விசாரணை நடத்திக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த கும்பல், இரு போலீஸ் கான்ஸ்டபிள்களையும் கொடூரமாக தாக்கி, ஓடும் ரயிலில் இருந்து தூக்கி வீசினர். இந்த சம்பவத்தில், இரண்டு கான்ஸ்டபிள்களும் பலியாகினர். இந்த நிலையில் 2 கான்ஸ்டபிள்களை ரயிலில் தள்ளிவிட்டு கொன்ற பீகார் மாநிலம் பாட்னா அடுத்த புல்வாரி ஷெரீப்பை சேர்ந்த முகமது ஜாஹித் என்பவனை நொய்டா எஸ்டிஎப் மற்றும் காஜிபூர் காவல்துறையின் கூட்டு தனிப்படை தேடி வந்தது.

இந்நிலையில் காஜிபூர் அடுத்த தில்தர்நகர் பகுதியில் ரவுடி முகமது ஜாஹித் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. போலீசார் அவனை சுற்றிவளைத்த போது, அவன் போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினான். போலீசார் பதிலடி துப்பாக்கி சூடு நடத்தியதில், முகமது ஜாஹித் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான். இந்த வழக்கில் 6 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

The post ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்டு 2 போலீசாரை கொன்ற ரவுடி சுட்டுக் கொலை: உத்தரபிரதேச போலீஸ் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Uttar Pradesh ,Ghazipur ,Parmar-Guwahati ,
× RELATED 11-ம் வகுப்பு மாணவியை கடத்தி சென்ற...