ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது சட்டப்பிரிவு கடந்த 2019ம் ஆண்டு ரத்து செய்யப்பட்ட பிறகு, 10 ஆண்டுகள் கழித்து ஜம்மு காஷ்மீரில் மொத்தமுள்ள 90 பேரவை தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி ஜம்மு காஷ்மீரின் 7 மாவட்டங்களில் உள்ள 24 தொகுதிகளுக்கு கடந்த 18ம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு எந்தவித அசம்பாவித சம்பவங்களும் இன்றி அமைதியாக நடந்து முடிந்தது.
இந்நிலையில் 6 மாவட்டங்களில் உள்ள 26 பேரவை தொகுதிகளுக்கு இன்று 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இன்றைய தேர்தலில் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, ஜேகேபிசிசி தலைவர் தாரிக் ஹமீத் கர்ரா, ஜம்மு காஷ்மீர் பாஜ தலைவர் ரவீந்தர் ரெய்னா உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதன்படி ஸ்ரீநகர் மாவட்டத்தில் 93 வேட்பாளர்களும், புட்காம் மாவட்டத்தில் 46 வேட்பாளர்களும், ரஜோரியில் 34வேட்பாளர்களும், பூஞ்ச் மாவட்டத்தில் 25 பேரும், கந்தர்பாலில் 21 மற்றும் ரியாசி மாவட்டத்தில் 20 பேர் என மொத்தம் 239 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.
இவர்களின் தலைவிதியை நிர்ணயிக்க 25 லட்சம் மக்கள் வாக்களிக்க உள்ளனர். பொதுமக்கள் வசதியாக வாக்களிக்க 1,056 நகர்ப்புற வாக்குச்சாவடிகள், 2,446 கிராமப்புற வாக்குச்சாவடிகள் என மொத்தம் 3,502 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 13,000 பேர் தேர்தல் பணிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர். துணை ராணுவத்தினர், ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
The post ஜம்மு காஷ்மீரில் 26 தொகுதிகளில் இன்று 2ம் கட்ட தேர்தல் appeared first on Dinakaran.