பெய்ரூட்: லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் பலியானோர் எண்ணிக்கை 558ஆக உயர்ந்து விட்டது. பதிலடியாக இஸ்ரேல் மீது 200 ராக்கெட்டுகளை ஏவி ஹிஸ்புல்லா போராளிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இஸ்ரேல் ராணுவம் மற்றும் லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லா அமைப்புக்கு இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது. கடந்த 17ம் தேதி ஹிஸ்புல்லா இயக்கத்தினர் பயன்படுத்திய 5,000 பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறின. இதில் பலர் உயிரிழந்தனர். மறுநாள் வாக்கி டாக்கி வெடித்து சிதறியது.
இதில் 50க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 3000 பேர் படுகாயம் அடைந்தனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பு ராக்கெட் தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து, சில தினங்களுக்கு முன்பு லெபனானில் ஹிஸ்புல்லா இயக்கத்தினரைக் குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் பல நகரங்கள் தரைமட்டமானது. அடுக்கு மாடி கட்டிடங்கள் இடிந்து சரிந்தன. பல இடங்களில் பதற்றம் நிலவியது. இதுவரை 50 குழந்தைகள் உள்பட 558 பேர் உயிரிழந்தனர். 1835 பேர் காயமடைந்துள்ளனர்.
கடந்த 2 நாட்களில் மட்டும் இஸ்ரேல் தாக்குதலில் 558 பேர் பலியாகி இருப்பதை லெபனான் சுகாதார அமைச்சர் பிராஸ் அபியாட் உறுதி செய்துள்ளார். ஹிஸ்புல்லா அமைப்பின் 1600 முகாம்களை குறிவைத்து இஸ்ரேல் பல நகரங்களில் தாக்குதலை தீவிரப்படுத்தியது. இதனால் பீதி அடைந்த மக்கள் சிரியா நோக்கி தப்பி சென்றனர். பதிலடியாக இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா போராளிகள் நேற்று தாக்குதல் நடத்தினார்கள். 200 ராக்கெட்டுகள் வீசி இந்த தாக்குதல் நடத்தப்பட்டன.
லெபனான் எல்லையில் இருந்து 60 கிமீ தொலைவில் அமைந்துள்ள இஸ்ரேலின் ஆயுத கிடங்கு குறிவைத்து தாக்கப்பட்டது. மேலும் 55 ராக்கெட்டுகள் அங்குள்ள கட்டிடங்கள் மீது விழுந்தன. இதனால் பலத்த தீவிபத்து ஏற்பட்டது. பல ராக்கெட்டுகளை இஸ்ரேல் ஏவுகணைகள் இடைமறித்து அழித்தன. இதனால் இருநாடுகள் இடையே பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலிலும் பலர் படுகாயம் அடைந்தனர். 2006ம் ஆண்டுக்கு பிறகு இந்த தாக்குதலில்தான் லெபனானில் பலர் பலியாகி விட்டனர்.
ஏற்கனவே இஸ்ரேல் காசா மீது கடந்த அக்டோபர் தொடங்கி கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ்களை முழுமையாக அழிக்கும் வரை தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் அறிவித்து உள்ளது. தற்போது ஈரான் ஆதரவு கொண்ட ஹிஸ்புல்லாக்களை எதிர்த்து தற்போது லெபனான் மீதும் தாக்குதலை வலுப்படுத்தி வருகிறது இஸ்ரேல். இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் மேலும் வலுப்பெற்றுள்ளது. இது சர்வதேச அளவில் அச்சத்தைக் கடத்தியுள்ளது. இஸ்ரேல் தனது தாக்குதல் இலக்குகளை விரிவுபடுத்துவது மத்திய கிழக்குப் பிராந்தியம் முழுவதையுமே போர் பதற்றத்துக்குள் ஆழ்த்தும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது.
* ஐ.நா. தலைவர் கண்டனம்
இஸ்ரேல் தாக்குதல் குறித்து ஐநா தலைவர் அன்டோனியோ குட்டெரெஸ் கூறுகையில், லெபனான் மற்றொரு காஸாவாக மாற சாத்தியம் இருப்பதாக அச்சம் தெரிவித்துள்ளார். லெபனானில் உள்ள ஐநாவின் சிறப்பு ஒருங்கிணைப்பாளர் ஜீனைன் ஹென்னிஸ், ‘மத்திய கிழக்கு நாடுகள் தற்போது பேரழிவின் விளிம்பில் இருக்கிறது. இரு தரப்பிலும் பாதுகாப்பான சூழலை உருவாக்கும் எந்த ராணுவ தீர்வும் தற்போதைக்கு இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு லெபனான் தாக்குதலை கடந்த சில ஆண்டுகளில் நடந்த மிகக் கொடூர வன்முறை என்று விமர்சித்துள்ளது.
* ஹிஸ்புல்லா மூத்த கமாண்டர் பலி
பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதியில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த கமாண்டர் கொல்லப்பட்டார். அவர் ராக்கெட் பிரிவு தளபதியாக இருந்தார். அவரது பெயர் இப்ராஹிம் குபைசி என்று ஹிஸ்புல்லா குழு தெரிவித்துள்ளது. நேற்று நடந்த தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post பலி எண்ணிக்கை 558ஆக உயர்வு லெபனான் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்: 200 ராக்கெட்டுகளை ஏவி ஹிஸ்புல்லா பதிலடி appeared first on Dinakaran.