நன்றி குங்குமம் டாக்டர்
பொதுவாக வயது வித்தியாசமின்றி பெண்கள் அனைவருமே முக அழகிற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ அதே அளவு கூந்தல் பராமரிப்பிலும் கவனம் செலுத்துவார்கள். ஆனால், இன்றைய நவீன வாழ்க்கை முறை மாற்றத்தாலும், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களாலும், பெரும்பாலான பெண்கள் முடி உதிர்வு, பொடுகு தொல்லை, முடி வெடிப்பு, அடர்த்தி குறைந்த முடி போன்ற முடி தொடர்பான பல பிரச்னைகள் சந்தித்துவருகின்றனர். இதற்கு தீர்வாக இருக்கும் என்று கடைகளில் விற்கப்படும் ரசாயனங்கள் கலந்த ஷாம்பு, சீரம், கண்டிஷனர் போன்ற தயாரிப்புகளை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால், எதிலும் தீர்வு கிடைக்கவில்லை என்பதே நிஜம்.
மேலும், இவற்றை எல்லாம் பயன்படுத்தும் முன்பே பாதி முடி கொட்டி விட்டது எனக் கவலைப்படும் பெண்களும் இங்கு உண்டு. அவர்களுக்குக் கிடைத்த மிகச் சிறந்த வரப்பிரசாதம் தான் ‘ஹேர் எக்ஸ்டென்ஷன்’. இதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம். பொதுவாக ஹேர் எக்ஸ்டென்ஷன் என்பது தலைமுடி அடர்த்தி இல்லாதவர்கள் முடியை அடர்த்தியாகக் காட்டவும் மற்றும் முடி நீளமாக வேண்டும் என்று நினைப்பவர்களும் ஹேர் எக்ஸ்டென்ஷனை பயன்படுத்துகின்றனர். இந்த ஹேர் எக்ஸ்டென்ஷனை முன்பெல்லாம் திரைப்படங்களில் சினிமா நடிகைகளின் முடியை அடர்த்தியாகவும் அழகாகவும் காட்ட பயன்படுத்தினர்.
ஆனால் தற்போது ஹேர் எக்ஸ்டென்ஷன்கள் அனைத்துத் தரப்பினரும் பயன்படுத்தும் வகையில் குறைந்த விலையில் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாகக் காலேஜ் பெண்கள், வேலைக்குச் செல்லும் பெண்கள் பலரும் ஹேர் எக்ஸ்டென்ஷன்களை பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். மேலும், திருமண விழாக்களில், மணப்பெண்ணின் கூந்தலை வித விதமான அலங்காரம் செய்யவும் ஹேர் எக்ஸ்டென்ஷன்களை பயன்படுத்துகின்றனர்.
ஹேர் எக்ஸ்டென்ஷன்களை பயன்படுத்தும் முறை
இதை பயன்படுத்துவது மிகவும் சுலபம். முடி அதிகம் உதிர்ந்து காலியாக இருக்கும் இடத்தை ஹேர் எக்ஸ்டென்ஷன் உதவியுடன் மறைக்கலாம். முன் பகுதியில் முடி அதிகம் உதிர்ந்து மண்டை தெரிந்தாலோ, பின் புறத்தில் சொட்டை விழுந்தாலோ அந்த இடத்தை ஹேர் எக்ஸ்டென்ஷன் மூலம் மறைக்க முடியும். பார்ப்பதற்கு அச்சு அசல் சொந்த முடி போலவே தோற்றம் தரும். வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாது.
பொதுவாக முன் பகுதியில் முடி உதிர்வதற்கான காரணம் என்னவென்று பார்த்தால், பல மாதங்களாக, சொல்லப்போனால் பல வருடங்களாக ஒரே விதமான ஹேர் ஸ்டைலில் தலை வாருவது, தொடர்ச்சியாக ஒரே மாதிரியான முன் வகிடு, சைடு வகிடு எடுப்பதே முன் பகுதியில் அதிக முடி உதிர்தலுக்கு காரணம். எனவே முடிந்த வரை குறைந்தது 2 வாரங்களுக்கு ஒருமுறையாவது ஹேர் ஸ்டலை மாற்றுவது நல்லது.
ஹேர் எக்ஸ்டென்ஷனை தேர்ந்தெடுப்பது எப்படி?
ஹேர் எக்ஸ்டென்ஷனில் பல வகையுண்டு. நீளம், அடர்த்தி, அதிக எடை, சில்கி ஹேர் எனப் பல வகைகளில் அனைத்து விதமான கூந்தலுக்கும் பொருந்தக்கூடிய ஹேர் எக்ஸ்டென்ஷன்கள் கடைகளில் விற்கப்படுகின்றன. அவற்றில் அவரவர் தலைமுடிக்கு பொருந்தக்கூடிய ஹேர் எக்ஸ்டென்ஷனை தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும். குறிப்பாக ஒருவரின் முடியின் நிறத்திலேயே அது இருக்க வேண்டும். பார்ப்பதற்கு இயற்கையான முடி போன்ற தோற்றத்தைத் தர வேண்டும். இதை எல்லாம் கவனத்தில் கொண்டு ஹேர் எக்ஸ்டென்ஷன்களை வாங்கவும்.
அதே சமயம், முடியை அதிக அடர்த்தியாகக் காட்ட வேண்டும் என்று அதிக எடையுடன் இருக்கும் ஹேர் எக்ஸ்டென்ஷன்களை வாங்கக் கூடாது. அதுபோன்று ஹேர் எக்ஸ்டென்ஷன்களை அதிக நேரம் தலையில் வைத்திருக்கும் போது கழுத்து வலி, தலைவலி போன்ற பிரச்னைகளும் வரலாம்.ஒரு குறிப்பிட்ட பகுதியில் தொடர்ந்து ஒரே மாதிரியான ஹேர் எக்ஸ்டென்ஷன்களை ஒட்ட வைக்கக் கூடாது. இதனால் அந்த பகுதியில் ஏற்கெனவே உள்ள குறைந்த முடியும் உதிர்ந்து போக வாய்ப்பு உண்டு.
எந்தவித தயக்கமும் பயமுமின்றி எல்லா பெண்களும் தாரளமாக ஹேர் எக்ஸ்டென்ஷன்களை பயன்படுத்தலாம். இது முடிக்கு அழகை தருவதோடு மட்டுமல்லாமல் முடி உதிர்வை நினைத்துக் கவலைப்படுபவர்களுக்கு இது வரப்ப்பிரசாதமாகவே பார்க்கப்படுவதோடு ஒருவிதமான தன்னம்பிக்கையும் தருகிறது.
தொகுப்பு: ரிஷி
The post ஹேர் எக்ஸ்டென்ஷனை பயன்படுத்தலாமா? appeared first on Dinakaran.