×

பீட்ரூட் கீரையின் பயன்கள்!

நன்றி குங்குமம் டாக்டர்

உயிர்தொழில்நுட்பத் துறை முனைவர் ஆர். சர்மிளா

அன்றாட உணவில் பயன்படுத்தப்பட்டு வரும் காய்கறிகளில் ஒன்று பீட்ரூட். இதில் பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்து காணப்படுகிறது. ஆகையால் நாம் அடிக்கடி உணவில் சேர்ப்பது வழக்கம். காயில் எவ்வளவு சத்துகள் நிறைந்திருக்கின்றதோ அதற்கு நிகரான சத்துகள் பீட்ரூட் கீரையிலும் நிறைந்திருக்கிறது. ஏராளமான சத்துகள் உள்ளடக்கிய இந்த பீட்ரூட் கீரையை பெரும்பாலானோர் உணவில் சேர்த்துக் கொள்வதில்லை. இதற்கு காரணம் இக்கீரையைப் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாததும். இக்கீரையை சமைக்கலாம் என்றே தெரியாமல் இருப்பதுமே. எனவே, இக்கீரையில் உள்ள சத்துகள் குறித்து அறிந்து கொள்வோம்.

பீட்ரூட் கீரையை உணவுக்காக மட்டுமின்றி மருந்து மூலிகையாகவும் பயன்படுத்தலாம். தமிழில் செங்கிழங்கு, அக்காரக்கிழங்கு என்றும் பீட்ரூட் அழைக்கப்படுகிறது.

பீட்ரூட் கீரையின் தாவரவியல் பெயர்: பீட்டா வல்காரிஸ்.

இது ஐரோப்பாவினை தாயகமாகக் கொண்டாலும் இன்று அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், போலந்து, ஜெர்மனி மற்றும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகிறது.

ஆரம்பகாலத்தில் இது மாட்டுத் தீவனத்திற்காகவும், கோழித் தீவனத்திற்காகவும் மட்டுமே பயிரிடப்பட்டு வளர்க்கப்பட்டதாக தரவுகள் தெரிவிக்கின்றன. பின்னரே உணவிற்காகவும், மூலிகை பயன்பாட்டிற்காகவும் பெருமளவு பயிரிடப்படுகிறது.

பீட்ரூட் கீரையில் காணப்படும் சத்துகள்

100 கிராம் பீட்ரூட் கீரையில்
புரதம் – 3.4 கி
நார்ச்சத்து – 0.7 கி
கார்போஹைட்ரேட் – 6.6. கி
கொழுப்பு – 0.8 கி
கால்சியம் – 300 மி.கி
இரும்பு – 16 மி.கி
பாஸ்பரஸ் – 30 மி.கி
வைட்டமின் சி – 70 மி.கி

இத்துடன் அயோடின், மாங்கனிஸ், மெக்னீசியம், சிலிகான், துத்தநாகம், வைட்டமின்ஏ, வைட்டமின் பி போன்ற சத்துகள் நிறைந்து பீட்ரூட் கீரையில் காணப்படுகின்றன.

பீட்ரூட் கீரையில் காணப்படும் தாவர மூலக்கூறுகள்:

பீட்டாலைன் – இதுதான் பீட்ரூட் கீரையின் சிவப்பு நிறத்திற்கு காரணமாக உள்ள மூலக்கூறு ஆகும். இது ஆன்டி ஆக்ஸிடன்டாகவும் செயல்படுகிறது. குறிப்பாக, பல்வேறு வகையான புற்றுநோயைக் குணப்படுத்த உதவுகிறது.

வைட்டமின் ஏ, சி மற்றும் கே நிறைந்து காணப்படும். பிளேவோனாய்டுகள், நைட்ரேட், கரோட்டினாய்டுகள், பீட்டைன் உள்ளிட்ட மூலக்கூறுகளும் பீட்ரூட் கீரையில் உள்ளன. நைட்ரேட் – ரத்த அழுத்தத்தை குறைக்க பெரிதும் உதவுகிறது.

பீட்ரூட் கீரையின் மருத்துவ பண்புகள்:

கலோரி மற்றும் கொழுப்பின் அளவு குறைந்து இக்கீரையில் காணப்படுவதினால் உடல் பருமனை குறைக்கவும், நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டினை மேம்படுத்தவும் உதவும். வைட்டமின் பி நிறைந்து உள்ளதால் ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரித்து ரத்த சோகையை தடுக்கலாம்.கால்சியம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின் டி சத்துகளால் பற்கள் ஆரோக்கியம் மேம்படுத்தப்படுகிறது.

கர்ப்பிணிப் பெண்களுக்கு இயற்கையாகவே ஃபோலேட் சத்து கிடைக்க இக்கீரையை மருத்துவர் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ளலாம்.வைட்டமின் ஏ இக்கீரையில் செறிந்து உள்ளதால் கண் சம்பந்தமான பிரச்னைகள் அனைத்தையும் தவிர்க்கலாம். இதில் உள்ள நார்ச்சத்து உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை உறிஞ்சி வெளியேற்ற உதவுகிறது. உடல் சூட்டினை குறைக்கவும், கல்லீரல் செயல்பாட்டினை மேம்படுத்தவும் உதவுகிறது.

பீட்ரூட் கீரையில் நரம்புகள் அதிகம் காணப்படும். இந்த நரம்புகளில் கமராட்டின் உள்ளது. இது வைட்டமின் ஏ சத்துகளை தன்னுள் சேமித்து வைக்க தவுவதால் இது வைட்டமின் ஏ யின் சேமிப்புப் பட்டரை எனவும் அழைக்கப்படுகிறது. உடல் உறுப்புகளையும், சருமத்தையும் பாதுகாத்து பொலிவுடனும் சுறுசுறுப்புடனும் செயல்பட பீட்ரூட் கீரை உதவுகிறது. குடலில் உள்ள அனைத்து நச்சுப் பொருள்களையும் வெளியேற்றி, செரிமானப் பிரச்னையை சீர்செய்கிறது.

ரத்தத்தில் உள்ள பைருவிக் அமிலத்தின் அளவினை குறைத்து இதயம் சீராக செயல்பட பீட்ரூட் கீரை உதவுகிறது. ரத்தக்குழாய்களில் அடைப்பினை ஏற்படுத்தும் ஹோமோசிஸ்டைன் என்ற மூலக்கூறினை கரைக்க பீட்ரூட்டில் காணப்படும் பீட்டைன் செயல்படுகிறது. அதுமட்டுமின்றி இதில் உள்ள ஃட்பாலிக் அமிலம் ஹோமோசிஸ்டைனின் அளவினை குறைத்து மாரடைப்பை தடுக்கிறது. பக்கவாதமும் தடுக்கப்படுகிறது. இத்தகைய நன்மைகளை உள்ளடக்கிய கீரையை சூப், பச்சடி, பொரியல், மற்றும் துவரம் பருப்பு, பாசிப்பருப்புடன் சேர்த்து கூட்டாக செய்தும் சாப்பிடலாம். எனவே பீட்ரூட் கீரையினை தூக்கி எறியாமல், தாராளமாக சமைத்து சாப்பிட்டு வர நன்மை கிடைக்கும்.

The post பீட்ரூட் கீரையின் பயன்கள்! appeared first on Dinakaran.

Tags : Saffron ,Dr. ,R. BEETROOT ,
× RELATED துத்திக் கீரை பயன்கள்!