×

வெள்ளத்தால் ஒருபுறமும் வறட்சியால் மறுபுறமும் பாதிக்கப்படும் சென்னையில் நீர்நிலையை உருவாக்குவதே சிறந்த முடிவு : தேசிய பசுமை தீர்ப்பாயம்

சென்னை: கிண்டி ரேஸ் கிளப் நிலத்தை நீர்நிலையாக மாற்றுவது குறித்து தமிழ்நாடு அரசு ஆலோசனை நடத்த தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. வேளச்சேரி ஏரி பாதுகாப்பு இயக்கம் சார்பில் தொடரப்பட்ட மனுவை தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்திய நாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் வேளச்சேரி ஏரிக்கு மேற்புறம் (upstream) பகுதிகளில் புதிய நீர்நிலைகளை உருவாக்க முடியுமா அல்லது ஏற்கனவே இருக்கும் நீர்நிலைகளை ஆழப்படுத்த முடியுமா என அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தபோது வேளச்சேரி ஏரிக்கு மேற்புறம் ஆதம்பாக்கம் ஏரி மட்டும் இருப்பதாகக் நீர்வளத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்ட தீர்ப்பாயம், கிண்டி ரேஸ் கிளப் நிலத்தை நீர் நிலையாக மாற்றுவது குறித்து அரசின் நிலைப்பாட்டை அறிந்து தெரியப்படுத்துமாறு அரசு தரப்பு வழக்கறிஞரிடம் தெரிவித்தனர். மேலும் பசுமைப் பூங்காவாக மாற்ற அரசு முடிவெடுத்துள்ள நிலையில் நீர்நிலையுடன் கூடிய பூங்காவாக உருவாக்கினால் பெருமழை காலங்களில் அதிக நீரை சேமிக்க முடியும். வெள்ளம் ஏற்படுவதையும் தடுக்க முடியும் என தெரிவித்து, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தது.

மேற்கண்ட வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, நீதிபதிகள், “ரேஸ் கிளப் நிலத்தில் புதிய பசுமைப் பூங்கா அமைப்பதை விட நீர்நிலை உருவாக்குவதே சிறந்த முடிவாக இருக்கும். வெள்ளத்தால் ஒருபுறமும் வறட்சியால் மறுபுறமும் பாதிக்கப்படும் சென்னையில் நீர்நிலையை உருவாக்கலாம். பள்ளிக்கரணை சதுப்பு நிலம், வேளச்சேரியில் ஆக்கிரமிப்பு கட்டடங்களை கிண்டி ரேஸ் கிளப்புக்கு மாற்றலாம்.ஆகவே கிண்டி ரேஸ் கிளப் நிலத்தை நீர்நிலையாக மாற்றுவது குறித்து தமிழ்நாடு அரசு ஆலோசனை நடத்த வேண்டும். பிற துறைகளின் செயலாளர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்தி பதில் அளிக்க வேண்டும், “இவ்வாறு தெரிவித்தனர். அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க அவகாசம் வழங்க வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர் வாதத்தை ஏற்று நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.

The post வெள்ளத்தால் ஒருபுறமும் வறட்சியால் மறுபுறமும் பாதிக்கப்படும் சென்னையில் நீர்நிலையை உருவாக்குவதே சிறந்த முடிவு : தேசிய பசுமை தீர்ப்பாயம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,National Green Tribunal ,South Zone National Green Tribunal ,Tamil Nadu government ,Kindi Race Club ,Velacheri Lake Conservation Movement ,Judicial Department ,the Southern Zone ,Dinakaran ,
× RELATED நெல்லையில் கொட்டப்பட்ட மருத்துவக்...