- கர்நாடக
- சித்தாரமயா
- பெங்களூர்
- காங்கிரஸ்
- உச்ச நீதிமன்றம்
- சித்தாரமயா
- பார்வதி
- முதல் அமைச்சர்
- சிதராமயா
- தின மலர்
பெங்களூரு: ஆளுநரின் அனுமதிக்கு எதிரான கர்நாடக முதல்வரின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால், சித்தராமையாவுக்கு அரசியல் ரீதியாக சிக்கல் ஏற்பட்டுள்ளதால் காங்கிரஸ் தலைமை திடீர் ஆலோசனை நடத்தி வருகிறது. காங்கிரஸ் மூத்த தலைவரான கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதியின் 3.16 ஏக்கர் நிலத்தை வீட்டுமனை கட்டுவதற்கு பயன்படுத்தியதற்காக மாற்று நிலமாக 14 வீட்டுமனைகளை மைசூரு நகர வளர்ச்சி ஆணையம் (மூடா) ஒதுக்கியிருந்தது. இதில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டால், முதல்வர் சித்தராமையா மீது கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர ஆளுநர் தாவர்சந்த் கெலாட் உத்தரவிட்டார். அதையடுத்து பெங்களூரில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் சித்தராமையாவுக்கு எதிராக டி.ஜே.ஆபிரகாம், ஸ்நேகமயி கிருஷ்ணா ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை சிறப்பு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இதனிடையே, ஆளுநர் அளித்திருந்த உத்தரவை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் முதல்வர் சித்தராமையா ரிட் மனு தாக்கல் செய்தார். அந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி நாகபிரசன்னா முன்பு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி நாகபிரசன்னா, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தார். இந்நிலையில் நீதிபதி நாகபிரசன்னா பிறப்பித்த உத்தரவில், ‘முதல்வருக்கு எதிராக ஆளுநர் அளித்துள்ள அனுமதி சட்டப்படி செல்லக்தக்கது. முதல்வர் சித்தராமையா தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று உத்தரவிட்டார்.
முன்னதாக சித்தராமையா சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வீடியோ கான்பரன்ஸ் மூலம் வாதங்களை முன்வைத்தார். உயர் நீதிமன்றத்தின் உத்தரவால், கீழமை நீதிமன்றத்தில் முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வாய்ப்புள்ளது. மேலும் முதல்வர் பதவியில் இருந்து சித்தராமையா உடனடியாக பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். ஒருவேளை சித்தராமையா பதவி விலக நேர்ந்தால், காங்கிரஸ் ஆட்சியைக் காப்பதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவால் மட்டுமே முடியும் என்று கட்சி மேலிடம் கருதுவதாக தெரிகிறது.
The post ஆளுநரின் அனுமதிக்கு எதிரான வழக்கு; கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனு தள்ளுபடி: அரசியல் ரீதியிலான சிக்கலால் காங்கிரஸ் ஆலோசனை appeared first on Dinakaran.