திருக்கோவிலூர்: கடந்த சட்டமன்ற தேர்தலின்போது அதிமுகவை அழித்துவிடுவார்களோ என்ற பயத்தில் தான் பாஜவுடன் கூட்டணி வைத்தோம் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக செயலாளர் குமரகுரு கூறியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் அரகண்டநல்லூரில் அதிமுக சார்பில் அண்ணாவின் 114வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. கூட்டத்தில் கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளரும், உளுந்தூர்பேட்டை முன்னாள் எம்எல்ஏவுமான குமரகுரு பேசியதாவது:
பாஜவுடன் எந்த காலத்திலும் கூட்டணி வைக்க கூடாது என்ற முடிவோடு தான் எடப்பாடி இருந்தார். ஆனால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த சூழ்நிலையில் கட்சியை துரோகிகள் இரண்டாக பிளந்துவிட்டனர். ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியிடம் சென்று அதிமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் பதவியில் இருந்து இறக்க வேண்டும். கட்சியை உடைக்க வேண்டும் அதற்கு நான் துணையாக இருக்கிறேன் என்று கூறினார். அப்போது ஒன்றியத்தில் இருந்த பாஜ அரசு, கலைக்கும் வேலையை பார்த்தார்கள்.
இரட்டை இலையை முடக்கினார்கள். அந்த சூழ்நிலையில் எடப்பாடி, மத்திய அரசோடு இணக்கமாக இருந்து கட்சியை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் ஓ. பன்னீர்செல்வம், பிரதமர் மோடி சொன்னால் தான் கட்சியில் இணைவேன் என்று கூறினார். பின்னர் கட்சியில் இணைந்த பிறகு சசிகலா மற்றும் தினகரனை அதிமுகவிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று கூறினார். ஜெயலலிதாவின் சாவில் மர்மம் உள்ளது என்று கூறினார். அப்போதிருந்த சூழ்நிலையில் எடப்பாடி கட்சியை காப்பாற்ற வேண்டும், இரட்டை இலையை காப்பாற்ற வேண்டும் என்பதால் தான் பாஜவோடு கூட்டணி வைத்தார்.
கட்சியை அழித்துவிடுவார்கள், இரட்டை இலையை முடக்கிவிடுவார்கள், அதிமுகவை சின்னாபின்னமாக்கிவிடுவார்கள் என்ற காரணத்தினால் தான் பாஜவோடு கூட்டணியில் இருந்தோம். இந்த நிலைமை இப்போது மாறிவிட்டது. நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு பல்வேறு அழுத்தங்கள், மிரட்டல்கள் வந்தது. ஆனால், பாஜவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக எடுத்த முடிவில் உறுதியாக இருந்தது. இவ்வாறு அவர் ேபசினார்.
The post கட்சியை அழித்துவிடுவார்களோ என்ற பயத்தில் தான் பாஜவுடன் கூட்டணி வைத்தோம்: அதிமுக நிர்வாகி பரபரப்பு பேச்சு appeared first on Dinakaran.