மதுரை : இளைஞர்கள் தாமாக முன்வந்து கால்வாய்களை தூர்வார அனுமதி கோரியும் ஏன் அனுமதி வழங்கவில்லை என்று ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. நீர் வரத்து கால்வாய்களை தூர்வார அனுமதி வழங்க கோரி தன்னார்வலர்கள் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில்,”ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர், சாயல்குடி, கமுதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை. முட்புதர்கள் மண்டி நீர் செல்ல முடியாத நிலை, விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது. விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டால், பல்வேறு மாவட்டங்களுக்கு வேலை தேடி செல்ல வேண்டிய சூழல் ஏற்படும்.
ஆதலால் சீமை கருவேல மரங்களை அகற்றி கால்வாய் தூர்வார எங்களது தொண்டு நிறுவனத்திற்கு அனுமதி கோரி விண்ணப்பித்தோம். ஆனால் கால்வாயைத் தூர்வார மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தொண்டு செய்ய வருகிறார்கள்; ஆனால் அவர்களுக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பை தரவில்லை. எனவே நீர்வரத்து கால்வாய்களைத் தூர்வார தங்கள் தொண்டு நிறுவனத்துக்கு அனுமதி வழங்க மாவட்ட நிர்வாகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும், “இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணையில் உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள்,”தமிழக முதல்வர் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடுகளுக்குச் செல்கிறார். ஆனால் இங்குள்ள அதிகாரிகளின் பொறுப்பின்மையால் முதலீடு செய்பவர்கள் திரும்பி விடுகின்றனர்.ஆயிரம் இளைஞர்கள் ஆர்வமாக தொண்டு செய்ய வந்தாலும் அதிகாரிகள் ஒத்துழைப்பதில்லை. இளைஞர்கள் தாமாக முன்வந்து கால்வாய்களை தூர்வார அனுமதி கோரியும் ஏன் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை?. கால்வாயைத் தூர்வார அனுமதி கோரிய மனு மீது ராமநாதபுரம் ஆட்சியர் பதிலளிக்க ஆணையிடுகிறோம், “இவ்வாறு தெரிவித்தார்.
The post முதலமைச்சர் முதலீடுகளை ஈர்த்து வருகிறார்; ஆனால், அதிகாரிகள் திருப்பி அனுப்புகிறார்கள் : உயர்நீதிமன்றம் கருத்து appeared first on Dinakaran.